ETV Bharat / city

ஒரே ஆண்டில் 2,000க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் மீட்பு!

author img

By

Published : Apr 26, 2022, 3:27 PM IST

"ஓராண்டில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்"- டிஜிபி சங்கர் ஜிவால்
"ஓராண்டில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்"- டிஜிபி சங்கர் ஜிவால்

சென்னை காவல் துறையின் காவல் கரங்கள் என்கிற உதவி மையம் மூலம் கடந்த ஓராண்டில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றோர்கள் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை: காவல் கரங்கள் முதலாம் ஆண்டு நிறைவு விழா எழும்பூர், இராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டு, காவல் கரங்கள் முதலாம் ஆண்டின் சாதனை மலரை வெளியிட்டனர்.

அதனைத் தொடர்ந்து தன்னார்வலர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினர். மேலும் தொண்டு நிறுவனங்களுக்கு உதவிப்பொருள்களை வழங்கி, காவல் கரங்கள் பற்றிய குறும்படத்தைப் பார்வையிட்டனர். இறுதியாக ஆதரவற்றவர்களுக்குக் காவல் கரங்கள் மூலம் உணவு விநியோகம் செய்ய நடிகர் சூர்யாவின் 2டி, எண்டர்டெயின்மென்ட் தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள வாகனத்தைக் கொடியசைத்துத் தொடக்கிவைத்தனர்.

காவல் கரங்கள் உதவி மையம்: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், ‘காவல் கரங்கள் உதவி மையத்துடன், 40 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், 120 தன்னார்வலர்கள், 55 மாநகராட்சி இல்லம், 148 தனியார் இல்லம், சமூக நலத்துறை,108 ஆம்புலன்ஸ் ஆகியவை இணைந்து ஆதரவற்ற நபர்களை மீட்டு அவர்களுக்கு உதவி செய்து வருகிறது.

நடிகர் சூர்யாவின் 2டி, எண்டர்டெயின்மென்ட் தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள வாகனத்தைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்
நடிகர் சூர்யாவின் 2டி, எண்டர்டெயின்மென்ட் தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள வாகனத்தைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர்

இதுவரை காவல் கரங்கள் உதவி மையம் மூலம் வீடற்ற மற்றும் ஆதரவற்ற நிலையிலிருந்த 2,541 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 1,499 பேர் காப்பகங்களில் தங்க வைத்தும், 161 பேர் அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டும், 159 பேர் மனநல மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டும், உரிமை கோரப்படாத 722 இறந்த உடல்களைத் தன்னார்வலர்களின் உதவியுடன் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்துள்ளது’ எனக் கூறினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி கூறுகையில், திரைப்படத்தில் காட்டுவது போல் திருடர்களைப் பிடிப்பது, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தீர்ப்பது மட்டும் காவலர்கள் பணி அல்ல, அவர்களுக்கு வேறு சில முகங்களும் உள்ளன, அன்பு முகம், பாசமுகம், தியாக முகம் எனப் பலமுகம் உள்ளது.

காவலர்களின் அன்பு முகம்: கடலில் நிற்கும் கப்பலின் மேல் பகுதி மட்டும் தான் பார்வைக்குத் தெரியும், முக்கியமான அடிப்பகுதி யாருக்கும் தெரியாது அது போலக் காவலர்களுக்குத் தெரியாத பக்கங்கள் உள்ளன. கோவிட் தொற்று ஒழிப்பில் காவல் துறை பங்களிப்பு அளப்பரியது. முககவசம் போன்ற விழிப்புணர்வு நிகழ்வில் காக்கி உடையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் பொதுமக்கள் சீக்கிரம் புரிந்து கொள்கிறார்கள்.

காவல் கரங்கள் முதலாம் ஆண்டின் சாதனை மலரை வெளியிட்டனர்
காவல் கரங்கள் முதலாம் ஆண்டின் சாதனை மலரை வெளியிட்டனர்

ஆதரவற்றவர்களை மீட்பதில் மாநகராட்சி, சுகாதாரத் துறை பங்களிப்பைத் தாண்டி காவல்துறை உதவியும் அத்தியாவசியமான ஒன்று. சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் தொண்டு நிறுவனங்களைப் பாராட்டுகிறோம். வீடற்றவர்களுக்கான 28 மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது 2000 பேர் தங்க வைக்க வசதி உள்ளது. இன்னும் 1000 முதல் 1500 பேரைத் தங்க வைக்க முடியும்.

அடையாளம் தெரியாத உடல்களை மாநகராட்சி இடுகாடுகளில் புதைப்பதற்கு ஏற்படும் நடைமுறை சிக்கல்களைத் தீர்க்க காவல் கரங்கல் மையத்துடன் இணைந்து மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். காவல் துறை பற்றி பொது மக்களிடையே எதிர்மறை சிந்தனை அதிகம் உள்ளது, ஆனால் அதற்கு மத்தியிலும் காவல் கரங்கள் போன்ற நேர்மறையான செயல்களிலும் காவல் துறை ஈடுபட்டு வருகிறது.

காவல் கரங்கள் மூலம் கடந்த ஓராண்டில் 2000க்கும் மேற்பட்ட ஆதரவற்ற நபர்களை மீட்டு உள்ளோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது சென்னையில் செயல்படும் காவல் கரங்கள் தமிழ்நாட்டையும் தாண்டி இந்திய அளவில் பெரிய உதவி மையமாகச் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் கண்டறியப்பட்டது வேதனை - சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.