ETV Bharat / city

குற்றவாளிகளின் நகர்வுகள் கூர்ந்து கவனிக்கப்படுகிறது - எச்சரிக்கும் சங்கர் ஜிவால்

author img

By

Published : Oct 24, 2021, 8:25 PM IST

சங்கர் ஜிவால்
சங்கர் ஜிவால்

பண்டிகை நாட்கள் என்பதால் பலகட்ட கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முகம் அடையாளம் கண்டறியும் செயலி மூலம் 7,800 குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை: தனியார் மருத்துவமனை (எம்ஜிஎம் ஹெல்த் கேர்) சார்பில் சென்னை மெரினாவில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மார்பக புற்றுநோயால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் பாதிப்பை தடுக்க முடியும் என்றும் கூறினார்.

chennai commissioner sankar jiwal
மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி

இதற்காக பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே சைக்கிள் பேரணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், 40 வயதுக்கு மேலானவர்கள் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

கண்காணிப்பு தீவிரம்

பண்டிகை காலம் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், ட்ரோன்கள் மூலமாகவும் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நிகழாமல் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறிய சங்கர் ஜிவால், சென்னைக்கு உள்ளே வருவோர், வெளியே போவோரையும் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

மேலும், முக அடையாளம் கண்டறியும் செயலி மூலம் 7,800 குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கண்காணிக்கும் பணியும் நடைபெற்று வருவதாகவும் கூறிய சங்கர் ஜிவால், ரவுடீசம் ஒழிப்பு என்பது தொடர் நடவடிக்கை என்றும், சென்னையில் நேற்று மட்டும் 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

போதைப் பொருள் தடுப்பு, ரவுடியிசம் ஒழிப்பு, சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு ஆகியவற்றை இலக்காக வைத்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த 3 ஆண்டுகளில் அதிகளவில் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கஞ்சா கடத்தியதற்காக 176 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இரு தரப்பினரிடையே மோதல் - 3 பேர் காயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.