ETV Bharat / city

அடுத்த 20 ஆண்டுகளுக்கு திமுக அரசை யாராலும் அசைக்க முடியாது - அமைச்சர் கே.என். நேரு

author img

By

Published : Apr 13, 2022, 9:44 PM IST

KN Nehru
KN Nehru

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சரியாகப் பணியாற்றினால், அடுத்த 20 ஆண்டுகளுக்கு திமுக அரசை யாராலும் அசைக்க முடியாது என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான நிர்வாகப்பயிற்சி முகாமை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

பின்னர் பயிற்சிக்கான கையேட்டையும் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி, சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, நகர்ப்புற நிர்வாகத் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, அரசியலில் இந்திய அளவில் பெரிய அளவுக்கு வந்தவர்கள் அனைவரும், உள்ளாட்சியில் பதவி வகித்தவர்கள்தான் என்றும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சரியாக பணியாற்றினால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு திமுக அரசை யாராலும் அசைக்க முடியாது என்றும் தெரிவித்தார். உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக சிறப்பாகப் பணியாற்றினால் எதிர்காலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக, அமைச்சராக வரும் வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார். முதலமைச்சர் ஒரு நாளில் 19 முதல் 20 மணி நேரம் மக்கள் பணிக்காக உழைக்கிறார் என்றும், முதலமைச்சரை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உள்ளாட்சி அமைப்புகள்தான் நாட்டின் அடித்தளம் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றும், பத்து மற்றும் பதினொன்றாம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தப் பயிற்சியின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரூ.12 கோடி மதிப்புள்ள மூன்று சிலைகள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.