ETV Bharat / city

மக்கள் மறந்த புரட்சிப்புலி "சிங்காரவேலர்"

author img

By

Published : Aug 10, 2022, 9:05 PM IST

Updated : Aug 10, 2022, 10:34 PM IST

மக்கள்
மக்கள்

சுதந்திரப் போராட்ட வீரராகவும், பொதுவுடமைவாதியாகவும் திகழ்ந்து தமிழ்நாடு மக்களால் மறக்கப்பட்ட பெருந்தமிழர் ம.சிங்காரவேலர். "வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்படும் ஒரு நேரத்தில் ஒரு புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர்" என்று அண்ணா புகழாரம் சூட்டினார்.

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட நாம் அனைவரும் ஆயத்தமாகும் நிலையில், இந்த சுதந்திரத்தை நமக்கு பெற்றுத் தந்த சுதந்திரப் போராட்ட வீரர்களையும், தியாகிகளையும் நினைவுகூற வேண்டியது அவசியம். அந்த வகையில், தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தவாதியும், விடுதலைப் போராட்ட வீரருமான பெருந்தமிழர் ம.சிங்காரவேலரைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்...

சென்னையில் பிறந்த சிங்காரவேலர், திருவல்லிக்கேணியில் பள்ளிப்படிப்பை முடித்தார். மாநிலக் கல்லூரியில் இளங்களை பட்டப்படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தார். 1907ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டு பணியாற்றத் தொடங்கினார். அதேவேளையில், காந்தியக் கொள்கையால் கவரப்பட்டு இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்திலும் தன்னை ஐக்கியப் படுத்திக்கொண்டார். அதற்கு முன்னதாகவே சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகக் கொதித்தெழுந்த அவர், அயோத்திதாசப் பண்டிதர் தலைமையில் செயல்பட்டு வந்த பௌத்த சங்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தார்.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்

இந்த நிலையில் 1917ஆம் ஆண்டு ரஷ்ய மண்ணில் புரட்சி வெடித்தது. கம்யூனிஸ்ட்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதைப் பத்திரிகைகளிலும் நூல்களின் வாயிலாகவும் அறிந்து கொண்ட சிங்காரவேலர் மனதிலும் புரட்சிகரச் சிந்தனை துளிர்விட்டது. இயல்பிலேயே, பொதுவுடமை, சமத்துவம், சுய மரியாதை ஆகிய கருத்துகளில் நாட்டம் கொண்ட சிங்காரவேலருக்கு, அதை விஞ்ஞான வழியில் வெளிப்படுத்தும் மார்க்சியத் தத்துவத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதனால் இந்தியாவை ஆண்ட ஆங்கிலயேர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்ற தீவிர உணர்வு அவருக்குள் ஏற்பட்டது.

மேலும், ரஷ்யாவின் கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்டு, இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918இல் தொடங்கினார். சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார். தொழிலாளர் நலனுக்காக 1923ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி, உழப்பாளர் உழவர் கட்சியைத் தொடங்கினார். 1925இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் சிங்காரவேலரும் ஒருவர்.

சிங்காரவேலர் 1918ஆம் ஆண்டு மகாத்மா காந்தியைத் தன் தலைவராக ஏற்றார். இவர் ஆங்கிலேய ஆட்சியின் ரெளலட் சட்டத்தினை எதிர்த்தார். மேலும் 1919ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நீதி கேட்கும் வகையில் உருவெடுத்த ஒத்துழையாமை இயக்கத்தின் போராட்டத்திற்கு அனைத்து வழக்கறிஞர்களுக்கும் காந்தி அழைப்பு விடுத்தார். அப்போது தனது வழக்கறிஞர் ஆடையை எரித்தும் ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைச் சமாளிக்கும் விதமாக இங்கிலாந்தின் வேல்சு இளவரசர் இந்தியாவுக்கு வந்தார். அவரது வருகையை எதிர்க்கும் விதமாக சிங்காரவேலர் சென்னையில் பெரிய போராட்டம் ஒன்றை முன்னின்று நடத்தினார். இப்போராட்டம் ஆங்கிலேய அரசையே உலுக்கியது என்று அறிஞர் அண்ணாகூட கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதியன்று சென்னை அச்சுத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய அவர், "எனக்கு வயது 84. ஆயினும் தொழிலாளி வர்க்கத்திற்கு என் கடமையைச் செய்ய நான் இங்கே வந்துள்ளேன். உங்கள் மத்தியில் நான் இறந்தாலும் அதைவிட எனக்குக் கிடைக்கக்கூடிய பாக்கியம் வேறென்ன? கம்யூனிஸ்ட் கட்சிதான் உங்களுடைய சரியான அரசியல் தலைமை" என்று முழங்கினார்.

சிங்காரவேலர் 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி சென்னையில் காலமானார். மரணமடைவதற்கு முன்பு தன் வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்டு சேர்த்து வைத்திருந்த 10 ஆயிரம் அரிய புத்தகங்கள் கொண்ட நூலகத்தை கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர் அன்பளிப்பாகக் கொடுத்தார்.

கடந்த 2011ஆம் ஆண்டு, சிங்காரவேலரின் 150வது பிறந்தநாளை தமிழ்நாடு அரசு, அரசு விழாவாக கொண்டாடியது. சிங்காரவேலர் மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், தமிழ்நாடு அரசு மீனவர் வீட்டு வசதித் திட்டத்திற்கு இவரது பெயரைச் சூட்டியுள்ளது. மேலும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சிங்காரவேலர் மாளிகை என்று பெயர் சூட்டியது. பேரறிஞர் அண்ணா இவரை, "வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்படும் ஒரு நேரத்தில் ஒரு புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர்" என்று கூறியுள்ளார். "போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!" என்று சிங்காரவேலரை குறித்து பாவேந்தர் பாரதிதாசன் பாடியுள்ளார்.

இதையும் படிங்க:75ஆவது சுதந்திர தினம்: அனைவர் வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற மாணவர்களுக்கு அறிவுரை - பள்ளிக்கல்வித்துறை

Last Updated :Aug 10, 2022, 10:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.