ETV Bharat / briefs

'ஊரடங்கில் மின் கட்டண கணக்கீடு குறித்து எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும்!'

author img

By

Published : Jun 29, 2020, 5:01 PM IST

ஊரடங்கில் மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என  எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
ஊரடங்கில் மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என மனுதாரரும், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகமும் எழுத்துப்பூர்வ வாதங்களாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார கணக்கீடு செய்யும் போது, இரண்டு 2 மாதங்களுக்கும் சேர்த்து மின்சார பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையை கழித்து விட்டு, மீத தொகைக்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்து, முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில், முதல் 2 மாதங்களுக்கான கட்டணத்தை தனி கட்டணமாகவும், மீத யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான கட்டணமாகவும் நிர்ணயித்து தனித்தனி கட்டண ரசீதுகளாக தயாரிக்க உத்தரவிடக்கோரி தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில், வீடுகளில் மின் அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ள முடியாவிட்டால், முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க விதிகள் உள்ளதாகவும், கட்டண நிர்ணயத்தில் விதிமீறல் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று(ஜூன் 29) இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மின் கட்டணம் எந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்பது குறித்து இரு தரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

இதையும் படிங்க : சென்னை இசைக்கலைஞர்கள் தொடுத்த வழக்கு: உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.