ETV Bharat / briefs

பாதாள சாக்கடைத் திட்டம்: மழைக்காலத்தில் பணிகள் நடைபெறுவதால் நோய்த்தொற்று பரவும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை!

author img

By

Published : Jul 8, 2020, 11:29 AM IST

பாதாள சாக்கடை திட்டம் மழைக்காலத்தில் பணிகள் நடைபெறுவதால் நோய்தொற்று பரவும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை,
பாதாள சாக்கடை திட்டம் மழைக்காலத்தில் பணிகள் நடைபெறுவதால் நோய்தொற்று பரவும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை,

திருவள்ளூர்: கமிஷன் விவகாரத்தால் டெண்டர் விடப்பட்டு ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டத்தில், மழைக்காலத்தில் பணிகள் நடைபெறுவதால் நோய்த்தொற்று பரவும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பேரூராட்சியில் அடங்கிய 18 வார்டுகளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரைக் கையாளுவது பேரூராட்சி நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக இருந்து வருவதால், அதனைத் தவிர்க்கும் வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பாதாள சாக்கடைத் திட்டத்தை அறிவித்தார்.

அதற்காக அப்போது குடிநீர் வடிகால் வாரியம் மூலம் டெண்டர் விடப்பட்டு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 54 கோடியே 78 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கட்டுமானப் பணிகளை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் 18 மாதத்தில் முடிக்கவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திடம் அதிகாரிகள் சிலர் கணிசமான தொகையை தரகுத் தொகையாக எதிர்பார்ப்பதாகவும் இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் தொடங்க முடியாமல் கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, ஏற்கெனவே ஒதுக்கப்பட்டதைவிட கூடுதலாக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு திட்ட மதிப்பு 74 கோடியே 78 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மக்களின் வரிப்பணம் 20 கோடி ரூபாய் அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணடிக்கப்பட்ட நிலையில், 2019ஆம் ஆண்டு ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.

அதற்கான காசோலையை உரிய நேரத்தில் வழங்காமல் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தியதால் பணிகள் அப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மழைக்காலம் தொடங்கியுள்ள சமீப காலத்தில் மீண்டும் பாதாள சாக்கடை அமைப்பதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் பல இடங்களில் சிமென்ட் சாலையை உடைத்து குழாய் புதைப்பதற்காக பள்ளம் தோண்டப்படுகிறது.

ஏற்கெனவே பாதாள சாக்கடைத் திட்டத்தைக் காரணம் காட்டி, பேரூராட்சி நிர்வாகம் உள்புற சாலைகளை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சீர்படுத்தாமல் கிடப்பில் போட்டதால் மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில், மழைநீர் தேங்கி நின்று மக்கள் நடந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்; மேலும் கொசுக்கள் உருவாகி டெங்கு காய்ச்சல், சிக்கன்குனியா போன்ற நோய்களால் பலர் பாதிக்கப்பட்டனர் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தற்போது கரோனா நோய்த்தொற்று பரவி வரும் நிலையில், சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்படுவதால் மழைநீர், அதில் தேங்கி நோய்த்தொற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள சமூக ஆர்வலர்கள், தரமற்ற முறையில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.