ETV Bharat / bharat

Yamuna water: மெல்ல குறைகிறது யமுனை நதியின் நீர்மட்டம்!

author img

By

Published : Jul 17, 2023, 8:58 AM IST

Yamuna River started continued to recede expected to come below danger mark soon
Yamuna water: மெல்ல குறைகிறது யமுனை நதியின் நீர்மட்டம் - விரைவில் ‘ஆபத்தான நிலைக்கு’ கீழே வரும் என எதிர்பார்ப்பு!

டெல்லியில் யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி இருந்த நிலையில் தற்போது நீர்மட்டம் மெல்ல குறையத்துவங்கி உள்ளது.

டெல்லி: தலைநகர் டெல்லியில் யமுனை நதியின் நீர்மட்டம், தற்போது, குறையத் துவங்கி உள்ளது. பழைய ரயில்வே பாலத்தில், ஜூலை 16-ஆம் தேதி இரவு 11 மணியளவில், யமுனை நதியின் நீர்மட்டம், 205.50 மீட்டராகப் பதிவாகி இருந்தது. நீர்மட்டம் இன்னும் அபாய அளவான 205.33 மீட்டர் என்ற அளவைத் தாண்டி இருந்தாலும், அது விரைவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முன்னதாக, டெல்லியில் யமுனை நதியின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி அளவில் 205.56 மீட்டராகப் பதிவாகி இருந்தது.

ஜூலை 16ஆம் தேதி, டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த டெல்லி வருவாய்த்துறை அமைச்சர் அதிஷி கூறியதாவது, “யமுனை நதியின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது, ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் யமுனையின் நீர்மட்டம் அபாயக் கட்டத்துக்குக் கீழ் வரும் என்று நம்புவதாக” குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இப்போது, ​​வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான மறுவாழ்வு முகாம்களை அமைப்பதற்கும் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறோம். ஆனால் நகரின் பல பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கி உள்ளது. தொடர்ந்து சாலைகளில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்றி வருகிறோம்” எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

டெல்லி அமைச்சர்கள் அதிஷி மற்றும் எல்ஜிவிகே சக்சேனா உள்ளிட்டோர், ஜூலை 16ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மகாத்மா காந்தி நினைவிடம் அமைந்து உள்ள ராஜ் காட், சாந்திவன் மற்றும் செங்கோட்டை பகுதிகளுக்கு சென்று, அதன் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்தனர்.

டெல்லியில் உள்ள யமுனை நதியின் நீர்மட்டம், ஜூலை 10ஆம் தேதி மாலை 5 மணியளவில் 205.33 மீட்டர் என்ற அபாய அளவைத் தாண்டியது. மத்திய நீர் ஆணையம் (CWC) ஜூலை 16 அன்று காலை 08:30 மணிக்கு வெளியிட்ட சமீபத்திய கணிப்பில், பழைய ரயில்வே பாலத்தின் நீர்மட்டம் இரவு 08:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 205.47 மீட்டராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதற்குப்பின் நீர்மட்டம் குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹரியானா மாநிலம் ஹத்னி குந்த் தடுப்பணையில் இருந்து, டெல்லி யமுனை நதிக்கு கடந்த ஜூலை 11ஆம் தேதி சுமார் 3,60,000 கனஅடி வீதம், நீர் வெளியேற்றப்பட்டு இருந்த நிலையில், ஜூலை 16ஆம் தேதி, இரவு 8 மணி நிலவரப்படி, நீர் வெளியேற்றம்,, 53,955 கனஅடியாக உள்ளது. டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) 17 குழுக்களை அனுப்பி உள்ளது. மக்கள் 7,241 பேர் மற்றும் 956 கால்நடைகள் NDRF குழுக்களால், இதுவரை மீட்கப்பட்டு உள்ளன.

மீட்கப்பட்ட மக்களில், 908 பேருக்கு மருத்துவமனைகளில் முன் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. டெல்லியின் ஆறு மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த தாழ்வான பகுதிகளில் இருந்து சுமார் 26,401 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அவர்களில் சுமார் 21,504 பேர், 44 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் பேரிடர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்ட எஞ்சிய மக்கள் தங்கள் உறவினர்களின் வீடுகள் அல்லது வாடகை குடியிருப்புகள் போன்ற தங்களுக்கு விருப்பமான இடங்களுக்கு மாறிவிட்டதாக, கூறப்படுகிறது.

இதையும் படிங்க: IT returns: வருமான வரி தாக்கல் செய்யப் போகிறீர்களா - படிவம் 16 இல்லாமலும் செய்யலாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.