ETV Bharat / bharat

Sakshi Malik: பிரிஜ் பூஷனுக்கு எதிரான குற்றப்பத்திரிகை - அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சாக்‌ஷி மாலிக் தகவல்!

author img

By

Published : Jun 16, 2023, 3:19 PM IST

Sakshi Malik
குற்றப்பத்திரிகை

பிரிஜ் பூஷனுக்கு எதிராக டெல்லி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரை கைது செய்யக்கோரியும் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட ஏராளமான மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பிரிஜ் பூஷனை கைது செய்வதோடு மட்டுமல்லாமல், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்தும் பிரிஜ் பூஷனை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து கடந்த 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி செல்ல முயற்சித்த மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போலீசார் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி போலீசாருக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து, மல்யுத்த வீராங்கனைகள் தங்களது பதக்கங்களை கங்கையில் வீச முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பிரச்சினை பூதாகரமான நிலையில், கடந்த 7ஆம் தேதி மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிரிஜ் பூஷன் மீதான வழக்குகளில் ஜூன் 15ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும், அதேபோல் ஜூன் 30ஆம் தேதிக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.

இதையடுத்து, டெல்லி போலீசார் திட்டமிட்டபடி நேற்று(ஜூன் 15) பிரிஜ் பூஷனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், பிரிஜ் பூஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், பிரிஜ் பூஷன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள, போக்சோ வழக்கில் போதிய முகாந்திரம் இல்லை என்றும், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளனர். போக்சோ வழக்கை ரத்து செய்ய பரிந்துரை செய்ததற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பிரிஜ் பூஷனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை குறித்து மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிபோது, குற்றப்பத்திரிகை நகலைப் பெற தங்களது வழக்கறிஞர் விண்ணப்பித்திருப்பதாகவும், அது கிடைத்ததும் அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, அதற்கேற்றார்போல் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகிகளை நீக்கிய இந்திய ஒலிம்பிக் சங்கம், கூட்டமைப்பை நிர்வகிக்க சிறப்புக்குழுவை அமைத்தது. ஜூலை 4ஆம் தேதி இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Kushboo: மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் விவகாரத்தில் தலையிடாடது ஏன்? - குஷ்பு விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.