ETV Bharat / bharat

WB panchayat election : மறு வாக்குப்பதிவு சுமூகம்.... நாளை வாக்கு எண்ணிக்கை!

author img

By

Published : Jul 10, 2023, 11:03 PM IST

West Bengal
West Bengal

மேற்கு வங்த்தில் ஏறத்தாழ 700 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் நாளை (ஜூலை 11) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஏறத்தாழ 700 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட்ட நிலையில், சுமூகமான முறையில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

மேற்கு வங்கம் மாநிலத்தில் கடந்த ஜூலை 8ஆம் தேதி கிராமப்புற பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 73 ஆயிரத்து 887 உள்ளாட்சி இடங்களுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் வேட்பாளர்கள் களமிறங்கினர்.

மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் கட்சியினரிடையே கடும் மோதல் போக்கு இருந்தது. ஜூலை 8ஆம் தேதி காலை 6 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. கூச்பெஹர், மால்டா, முர்ஷிதாபாத், வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், நாடியா உள்ளிட்ட மாவட்டங்களில் கலவரம் நடந்தது.

இந்த கலவரத்தில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட உள்ளிட கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் சில இடங்களில் வாக்குப் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டன, வாக்குச் சாவடிகள் சூறையாடப்பட்டன.

இதையடுத்து வாக்குப்பதிவில் முறைகேடு, வன்முறை மற்றும் கலவரம் நடந்ததாக கண்டறியப்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் திங்கட்கிழமை மறுவாக்குப் பதிவு நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஏறத்தாழ 700 வாக்குப்பதிவு மையங்களில் இன்று (திங்கட்கிழமை ஜூலை. 10) மறு வாக்குப்பதிவு நடைபெற்றது.

காலை 7 மணி மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர். வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், மோசமான நிகழ்வுகள் மற்றும் முறைகேடுகள் வாக்குப்பதிவு மையங்களில் நடைபெறவில்லை என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. நாடியா மாவட்டத்தில் வாக்கு செலுத்த வரிசையில் காத்திருந்த ஒருவர் மட்டும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாளை ஜூலை 11ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடந்தது உள்பட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட உள்ளதாக மாநில தேர்தல் அணையம் தெரிவித்து உள்ளது. வன்முறைச் சம்பவங்களை தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மறுவாக்குப் பதிவு நடந்த 19 மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சிசிடிவி கண்காணிப்பில் வாக்குகள் எண்ணப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. ஏறத்தாழ 5 கோடியே 67 லட்ச வாக்காளர்கள் உள்ள நிலையில், 80 புள்ளி 79 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

மாநிலத்தில் உள்ளாட்சி அதிகாரத்தை பிடிக்க திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி... இவர் தான் பர்ஸ்ட் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.