ETV Bharat / bharat

பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி... இவர் தான் பர்ஸ்ட் தெரியுமா?

author img

By

Published : Jul 10, 2023, 10:37 PM IST

இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி, ஜூலை 14ஆம் தேதி பிரான்ஸ் தேசிய தினமான பாஸ்டில் தின அணிவகுப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியா - பிரான்ஸ் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Modi
Modi

டெல்லி : பிரதமர் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் சுற்றுப்பயணம் செல்கிறார். வரும் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பிரான்ஸ் நாட்டிற்கு பிரதமர் மோடி செல்ல உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

வரும் 14ஆம் தேதி பிரான்ஸ் தேசிய தினம் எனப்படும் பாஸ்டில் தினத்தையொட்டி, சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து உள்ளார். பிரான்ஸ் அதிபரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அரசு முறை பயணமாக பிரான்ஸ் செல்கிறார்.

பாஸ்டில் தின அணிவகுப்பு கலந்து கொள்ள எந்த நாட்டு பிரதிநிதிகளுக்கும் பிரான்ஸ் அழைப்பு விடுத்ததாக அறியப்படாத நிலையில், பிரதமர் மோடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குடியரசு தின அணிவகுப்புக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரானை இந்தியாவும் அழைத்த நிலையில், குடியரசு தின அணிவகுப்பில் இந்திய அணியினருடன் பிரான்ஸ் குழுவினரும் கலந்து கொண்டனர்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானின் இந்திய பயணத்தின் அடுத்தக் கட்டமாக பிரதமர் மோடி பிரான்ஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இந்திய முன்னாள் பிரதிநிதி அச்சல் மல்கோத்ரா தெரிவித்து உள்ளார். மேலும் சிறிய நாடுகள் முதல் பெரிய நாடுகள் வரை இந்தியாவை அணுக விரும்புவதாக அவர் கூறினார்.

பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான இரு தரப்பு உறவு, வர்த்தக கூட்டாண்மை மற்றும் உலகளாவிய பிரச்சனைகள், குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் மோதலை எதிர்கொள்வதில் புரிதலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலும், இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் இந்திய கடற்படைக்காக 22 ஒற்றை இருக்கை கொண்ட ரபேல் கடற்படை விமானங்கள், 4 பயிற்சி விமானங்கள் மற்றும் 4 ஸ்கார்பீயன் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்வது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடியின் இந்த சுற்றுப் பயணத்தின் போது, ஏறத்தாழ 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரான்சிடம் இருந்து ஏற்கனவே 35 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கியுள்ள நிலையில், மேலும் 26 ரபேல் போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீண்ட பாதுகாப்பு ஒத்துழைப்பை கொண்டு உள்ள இந்தியா - பிரான்ஸ் ஆகிய நாடுகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டு ராணுவ போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதையும் படிங்க : பிரதமர் மோடி பிரான்ஸ் பயணம்... 26 ரபேல் விமானங்கள் கொள்முதல்? பிளான் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.