பாட்னா(பிகார்): பாட்னாவிலிருந்து நேற்று(ஜூன் 19) 185 பயணிகளுடன் டெல்லி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் அதன் இன்ஜினில் தீப்பிடித்துள்ளது. பறவை ஒன்று மோதியதால் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விமானிகளுக்கு எச்சரிக்கை சிக்னல் வந்ததையடுத்து, உடனடியாக விமானம் பாட்னா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விமானத்தின் கேப்டனாக இருந்த பெண் விமானி மோனிகா கண்ணா துரிதமாகவும், நிதானமாகவும் செயல்பட்டதால் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. ஆபத்தான நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட மோனிகா கண்ணா உள்ளிட்ட விமானிகளுக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. கேப்டன் மோனிகா கண்ணாவுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பறவை மோதியதால் விமானத்தின் இறக்கை மற்றும் இன்ஜின் சேதமடைந்துள்ளதாகவும், இதுதொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் ஸ்பைஸ்ஜெட் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நடுவானில் சிக்கிய கேபிள் கார்... 15 பேர் சுற்றுலா பயணிகளை மீட்கும் பணி தீவிரம்...