ETV Bharat / bharat

மிஸ் நெதர்லாந்து பட்டம் வென்ற முதல் திருநங்கை.. சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்தும், விமர்சனமும்!

author img

By

Published : Jul 11, 2023, 7:08 AM IST

மிஸ் நெதர்லாந்து பட்டம் வென்ற முதல் திருநங்கைரிக்கி வலேரி கோலே
மிஸ் நெதர்லாந்து பட்டம் வென்ற முதல் திருநங்கை ரிக்கி வலேரி கோலே

திருநங்கையான ரிக்கி வலேரி கோலே இந்த ஆண்டு நடைபெற்ற 2023 மிஸ் நெதர்லாந்து போட்டியில் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஹைதராபாத்: நெதர்லாந்தில் நடைபெற்ற 72வது மிஸ் நெதர்லாந்து போட்டியில், பட்டம் வென்று வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார், திருநங்கை ரிக்கி வலேரி கோலே. இந்த பட்டத்தைத் திருநங்கை வென்றிருப்பது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், பட்டம் வென்ற ரிக்கி தனது சமூகத்தை ஊக்கப்படுத்தவும், அவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதுமே தனது முதன்மையான குறிக்கோள் என தெரிவித்தார்.

திருநங்கைகள் சமுதாயத்தில் பல்வேறு வகையான பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அத்தனை தடைகளையும் தாண்டி திருநங்கை ரிக்கி சாதனை படைத்துள்ளது பெருமைக்குரிய ஒன்று. இருப்பினும் திருநங்கை ரிக்கியின் வெற்றி இரண்டு கோணங்களிலேயே பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் பரவிய ரிக்கியின் வெற்றிக்கு சிலர் பாராட்டுகளைத் தெரிவித்தாலும், சிலர் அவரின் வெற்றியை ஏற்க மறுக்கின்றனர். ரிக்கி, மிஸ் நெதர்லாந்து பட்டம் வென்ற புகைப்படத்தைத் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து, அவரது வெற்றி பெரும் எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது.

இதனால் தனது வெற்றியைப் பகிர்ந்து வந்த ரிக்கி, அவரது புகைப்படத்தைப் பதிவிடுவதையே நிறுத்தி விட்டார். இருப்பினும், திருநங்கை ரிக்கிக்கான விமர்சனங்கள் அதிகரித்தபடியே உள்ளது. ரிக்கி திருநங்கை என்பதை ஏற்க மறுக்கும் சிலர், சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்மறை விமர்சனங்கள்: “ஆண் நீச்சல், பளு தூக்குதல் போன்றவற்றில் தனது வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அழகுப் போட்டியிலும் வென்றுள்ளான். ரிக்கி பெண்ணாக இருந்திருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் வென்றிருக்க முடியாது. ஏன், ஆண் ரிக்கி பெண் உடையில் இருக்கிறார்? ஒரு ஆண் மீண்டும் ஒரு பெண்ணுக்கான உரிமையையும், பெருமையையும் பறித்து விட்டான். இதன் மூலம் நாம் 200 ஆண்டுகளாகப் பெண்களின் சம உரிமைக்காகப் போராடி வந்தது வீணாகி விட்டது” என மிஸ் நெதர்லாந்து போட்டியில் வென்ற ரிக்கியை விமர்சித்து வருகின்றனர்.

சாதகமான விமர்சனங்கள்: அழகிப் போட்டி என்பது ஒன்றும் விளையாட்டு அல்ல, இது அழகு சார்ந்த நிகழ்ச்சி. ரிக்கி திருநங்கை என்பதால் பெண்களுக்கு உண்டான அனைத்து அழகும், நளினமும் அவருக்கும் உண்டு. இந்த பட்டத்தை வெல்வதற்கான அனைத்து தகுதியும் திருநங்கை ரிக்கிக்கு உள்ளது.

திருநங்கை என்போர் ஆண்கள் கிடையாது. முதலில் திருநங்கை என்றால் யார் என்பது குறித்த தெளிவோடு பேச வேண்டும் என்றும், பெண் பெற வேண்டிய வெற்றியை ஒரு திருநங்கை பெற்று விட்டதால் இவ்வாறு அவரை விமர்சிக்கக் கூடாது என்றும் தங்கள் கருத்தை தெரிவித்தனர்.

எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் தனது குறிக்கோளான, தனது சமூகத்தை முன்னெடுத்து செல்வதே தனது முதன்மையான லட்சியம் என திருநங்கை ரிக்கி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: El Nino: கொதிக்கும் உலகம்; வெப்பநோய்களிலிருந்து தப்புவது எப்படி? 'எல் நினோ' விளைவு என்றால் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.