ETV Bharat / bharat

ஹைதராபாத்தில் ஒற்றை ஓநாய் தாக்குதல் நடத்த திட்டம்.. உபா சட்டத்தின் கீழ் 3 பேர் கைது...

author img

By

Published : Feb 5, 2023, 6:38 PM IST

ஹைதராபாத்தில் ஒற்றை ஓநாய் தாக்குதல் நடத்த திட்டம்
ஹைதராபாத்தில் ஒற்றை ஓநாய் தாக்குதல் நடத்த திட்டம்

தெலங்கானா மாநிலத்தில் ஒற்றை ஓநாய் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒற்றை ஓநாய் தாக்குதல் முறையில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்ததாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று (பிப்.5) கைது செய்தனர். இவர்கள் முகமது ஜாஹத், மாஸ் ஹசன் ஃபரூக் மற்றும் சமியுதீன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை தரப்பில், பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் கைது செய்யப்பட்ட முகமது ஜாஹத் தொடர்பு வைத்திருந்தார். இந்த அமைப்புகளின் கட்டளையின்படி மாஸ் ஹசன் ஃபரூக், சமியுதீன் ஆகியோருடன் சேர்ந்து 6 மாதங்களாக பொதுக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில் கையெறி குண்டுகளை வீசி வகுப்புவாத பதட்டங்களை உருவாக்க திட்டமிட்டிருந்தார்.

குறிப்பாக, ஹைதராபாத்தில் ஒற்றை ஓநாய் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தார். இதற்காக பயங்கரவாத அமைப்புகளிடம் ஏற்கனவே கையெறி குண்டுகள், வெடி மருந்துகளை பெற்றுள்ளார். இந்த குண்டுகளும், வெடி பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் 3 பேருடன் தொடர்பில் இருந்த மற்றவர்களையும் கண்டறிந்து கைது செய்யும் பணி நடந்துவருகிறது.

முதல்கட்ட தகவலில், இவர்கள் 3 பேருக்கும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) அமைப்புகளுடன் தொடர்பிருக்க வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது ஹைதராபாத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றை ஓநாய் தாக்குதல் முறை என்பது பயங்கரவாத செயல்களை தனியாளாக செய்து முடிப்பதாகும். கடந்தாண்டு கோயம்புத்தூரில் முபின் முயற்சித்ததும் ஒற்றை ஓநாய் தாக்குதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு.. திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் உயிரிழப்பு.. மற்றொருவர் படுகாயம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.