ETV Bharat / bharat

'கட்டுப்பாடாக இருந்திருக்க வேண்டும்' - விஜய் சேதுபதிக்கு உச்ச நீதிமன்றம் அட்வைஸ்!

author img

By

Published : Feb 10, 2023, 10:09 PM IST

Etv Bharat
Etv Bharat

கடந்த 2021-ல் பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இந்த விவகாரத்தில் ரசிகர் பட்டாளத்தை தன் வசம் கொண்ட நடிகரான விஜய் சேதுபதி கட்டுப்பாட்டுடன் நடந்திருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 2, 2021-ல் பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்ற விஜய் சேதுபதியை அடையாளம் தெரியாத நபர் ஓடி வந்து தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் உட்பட பலரையும் இந்தச் சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகியது.

இதனிடையே தமிழ் ஹீரோவிற்கு கர்நாடகத்தில் அவமரியாதை செய்யப்பட்டதோடு இவ்வாறு அநாகரிகமாக தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதாக தமிழ் ஆர்வலர்கள், ரசிகர்கள் உள்ளிட்டப் பல தரப்பினரும் கொந்தளித்தனர். இதனையடுத்து விமானநிலையத்தில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (CISF) விஜய் சேதுபதி மீது தாக்குதலில் ஈடுபட்டவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக நடிகர் விஜய் சேதுபதி கட்டுப்பாட்டுடன் நடந்திருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2021-ல் மகா காந்தி என்ற அந்நபர், நடிகர் விஜய் சேதுபதி பெங்களூரு விமான நிலையத்தில் தன்னை தாக்கியதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அதில், நான் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த நவம்பர் 2ஆம் தேதி மைசூர் சென்றபோது எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் சேதுபதியைப் பெங்களூரு விமான நிலையத்தில் சந்தித்ததாகவும், உடனே அவரிடம் சென்று பாராட்டி கை குலுக்க முயன்றதற்கு மறுத்த அவர், தன்னை பலரின் முன்னிலையில் பொதுவெளியில் இழிவுபடுத்தியதோடு தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய் சேதுபதியின் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக விஜய் சேதுபதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. தொடர்ந்து, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, விஜய் சேதுபதி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரத்து செய்ததோடு இது தொடர்பான விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்கவும் உத்தரவிட்டது.

இதனையடுத்து விஜய் சேதுபதி தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை இன்று (பிப்.10) விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு, 'நடிகரான மனுதாரர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ள கருத்துகள் பொதுவெளியில் கவனத்தைப் பெறுவதாகவும்; ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் கட்டுப்பாட்டுடன் நடந்திருக்க வேண்டும்' எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், 'நடிகரான உங்களின் குரல் பொதுமக்களின் மனதில் பதியும். ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நீங்கள் மிகவும் ஒழுக்கத்துடன் நடந்திருக்க வேண்டும். பொறுப்புள்ளவர்கள் யாரையும் அவதூறாக பேசக்கூடாது' என கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை வரும் மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் இரண்டு தரப்பினரையும் குறிப்பிடப்பட்ட நாளில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: Teddy Day 2023: காதலர் தின வாரத்தின் 'டெடி டே' ஸ்பெஷல் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.