ETV Bharat / bharat

ஹிமாச்சலப்பிரதேசத்தில் தொடரும் கனமழை - குலுவில் பயங்கர நிலச்சரிவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 6:01 PM IST

Himachal rains: ஹிமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், குலு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அடுக்குமாடி வீடுகள் மளமளவென இடிந்து விழுந்தன.

Himachal
குல்லுவில் பயங்கர நிலச்சரிவு

ஹிமாச்சலப்பிரதேசத்தில் தொடரும் கனமழை - குலுவில் பயங்கர நிலச்சரிவு!

ஹிமாச்சலப்பிரதேசம்: ஹிமாச்சலப் பிரதேசத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சோலன், சிம்லா, குலு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. குலு மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 24ஆம் தேதி) அன்னி என்ற பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுக்குமாடி குடியிருப்புகள் சீட்டுக்கட்டுப் போல சரிந்து விழும் பரபரப்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. நிலச்சரிவு காரணமாகவே வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், இந்த சம்பவத்தில் யாரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் குலு மாவட்டத்தில் கனமழை காரணமாக, குலு - மண்டி நெடுஞ்சாலை சேதமடைந்தது. இதனால், அந்த வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. போக்குவரத்து ஸ்தம்பித்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இது தொடர்பாக வாகன ஓட்டி ஒருவர் கூறும்போது, "போக்குவரத்து நெரிசலால் சுமார் 5 முதல் 10 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் நின்று கொண்டிருக்கின்றன. நீண்ட நேரமாக நாங்கள் இங்கேயே நின்று கொண்டிருக்கிறோம். சிற்றுண்டி, குடிநீர் என எதுவும் கிடைக்காமல் தவித்து நிற்கிறோம்" என்றார்.

காவல்துறை அதிகாரி சாக்‌ஷி வெர்மா கூறும்போது, "குலு - மண்டி இடையிலான சாலை சேதமடைந்துள்ளது. அதேபோல், அதன் மாற்றுவழியாக செயல்படும் சாலையும் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாகவே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இதற்கிடையில், ஹிமாச்சல பிரதேசத்தில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 13ஆம் தேதி சோலன் மாவட்டத்தில் ஜடோன் கிராமத்தில் மேக வெடிப்பு காரணமாக திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வீடுகள் இடிந்து விழுந்து, 7 பேர் உயிரிழந்தனர். சிம்லாவில் கடந்த 15ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

கடந்த ஒரு மாத காலமாக ஹிமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதுவரை 113 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த பருவமழையில் இதுவரை 224 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஹிமாச்சலில் மேக வெடிப்பு காரணமாக கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.