குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை:தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு அனுமதி - பெண்களுக்கே முக்கியத்துவம்!

author img

By

Published : Jan 24, 2023, 6:47 PM IST

தமிழக அரசு ஊர்தி

குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி கடமையின் பாதையில் இந்திய அலங்கார ஊர்திகள் அணிவகுத்து சென்றன. தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி பெண்களை மையப்படுத்தி அமைக்கப்பட்டு இருந்தது.

டெல்லி: குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் அணிவகுப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய ராணுவ வீரர்கள் மிடுக்கான தோற்றத்தில் வலம் வருவர். தொடர்ந்து முப்பைடை மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நிகழ்ச்சியில் செல்லும்.

வரும் 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழா அணிவகுப்புக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஊர்தி வடிவமைப்பின் மாதிரிகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் ஊர்தி கட்டமைக்கும் பணிகள் நடைபெற்றன.

தொடர்ந்து டெல்லி கடமையின் பாதையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. விழாவில் முப்படை வீரர்கள், பாதுகாப்புப் படையினர் கலந்து கொண்டு மிடுக்கான தோற்றத்தில் வலம் வந்தனர். தொடர்ந்து விமானப் படை விமானங்கள் சாகச நிகழ்வுகளில் ஈடுபட்டன.

பல்வேறு துறைகள் மற்றும் மாநில அரசுகள் எல்லைப்பாதுகாப்பு படைகளின் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து சென்றன. மாநில அலங்கார ஊர்திகளில், அந்தந்த மாநிலங்களின் கலாசாரம் மற்றும் பண்பாடு குறித்த கருத்துகள் அங்கம் வகித்தன. தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி, பெண்களை மையப்படுத்தியதாக இருந்தது.

ஊர்தியின் முகப்பில் மண்டபத்தின் மேலே அவ்வையார் இருப்பது போல் பிரமாண்ட உருவம் அமைக்கப்பட்டு இருந்தது. மண்டபத்தின் நாலாபுறங்களிலும் சிற்பங்கள் இடம்பெற்று இருந்தன. வீரமங்கை வேலுநாச்சியார், தஞ்சை பாலசரஸ்வதி பரதம் ஆடுவது போல், எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைக்கருவியுடனும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் மருத்துவ பையுடனும் சிலைகளாக இருந்தனர்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சிலையும் அலங்கார ஊர்தியில் இடம்பெற்று இருந்தன. வாழும் இயற்கை விவசாயி பாப்பம்மாள் கையில் மண்வெட்டியுடன் நிற்கும் சிலையும் ஊர்தியில் இடம்பெற்று இருந்தது. இந்த கட்டமைப்புக்கு பின்னால் தஞ்சை கோபுரம் இருந்தது. ஊர்தியின் இருபுறத்திலும் மேள வாத்தியங்கள் முழங்க கலைஞர்கள் நடனமாடி சென்றனர்.

கடந்தாண்டு குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு அனுமதிகொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இவ்வாண்டு தமிழ்நாடு அரசின் ஊர்தியில் முழுக்க முழுக்க பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி மேயர் தேர்தலில் தொடர் இழுபறி.. பாஜக - ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் கடும் அமளி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.