டெல்லி மேயர் தேர்தலில் தொடர் இழுபறி.. பாஜக - ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் கடும் அமளி!

author img

By

Published : Jan 24, 2023, 5:21 PM IST

மேயர் தேர்தல்

ஆம் ஆத்மி - பா.ஜ.க. உறுப்பினர்கள் அமளியைத் தொடர்ந்து டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

டெல்லி: 250 வார்டுகளைக் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் 134 வார்டுகளை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, 15 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக பா.ஜ.கவிடம் இருந்து மாநகராட்சியினை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

இந்நிலையில், டெல்லி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. முன்னதாக மாநகராட்சியின் தற்காலிக சபாநாயகராக பா.ஜ.க.வின் சத்ய சர்மா நியமிக்கப்பட்ட விவகாரம் மற்றும் நியமன கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டதில் ஆளுநர் சக்சேனா மற்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இடையே மோதல் போக்கு நிலவுவதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்புக்கு இடையே கடந்த 6ஆம் தேதி, டெல்லி மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல் நடைபெற்றது. நியமன உறுப்பினர்கள் பதவியேற்பு தொடர்பாக ஆம் ஆத்மி, பாஜக கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மேயர், துணை மேயர் தேர்தல் நடத்தப்படாமல் அவை ஒத்திகைப்பட்டது.

இந்நிலையில் இன்று(ஜன.24) மீண்டும் மாநகராட்சிக் கூட்டம் நடைபெற்றது. மேயர், துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தும் பணிகள் நடைபெற்றன. நியமன உறுப்பினர்கள், வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்றதும், அவை 15 நிமிடங்களுக்குள் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து அவைக்குள் நுழைந்த பாஜக உறுப்பினர்கள் மோடி மோடி என்றும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து ஆம் ஆத்மி உறுப்பினர்களும், இருக்கையில் அமரும் முன் கோஷங்களும் எழுப்பினர். இதனால் அமையில் மீண்டும் அமளி உருவாயிற்று. மேலும் டெல்லி துணை நிலை ஆளுநர் நியமித்த நியமன உறுப்பினர்கள் குறித்து ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும் பதவியேற்பைத் தொடர்ந்து நியமன உறுப்பினர்கள், பாரத் மாதா கி ஜெய், ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் எழுப்பியதாகவும், இதற்கு ஆம் ஆத்மி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதனால் அவையில் அமளி உருவானதாகவும் தற்காலிக சபாநாயகர் சத்ய சர்மா தெரிவித்தார்.

மேலும் இந்த அமளியின் இடையே அவையை நடத்துவது முறையல்ல என்றும்; அதனால் அவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். கடந்த ஜன.6ஆம் தேதியும் இதேபோல் ஆம் ஆத்மி மற்றும் பாஜக உறுப்பினர்களின் வாக்குவாதம் மற்றும் கடும் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் அவை ஒத்திவைக்கப்பட்டதால் டெல்லி மாநகராட்சிக்கு மேயர், மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுப்பதில் தொடர் இழுபறி நீடிக்கிறது.

இதையும் படிங்க: சீனாவின் உலக சாதனையை 50 நிமிடங்களில் முறியடித்த பள்ளி மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.