ETV Bharat / bharat

தேர்தல் ஆணையர் நியமன மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்! எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 7:04 PM IST

Updated : Dec 12, 2023, 7:25 PM IST

Etv Bharat
Etv Bharat

Rajya Sabha passes Election Commissioner Appointment Bill: தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் விதிகளில் மாற்றம் கொண்டு வரும் தேர்தல் ஆணையர் நியமன மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

டெல்லி : தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் விதிகளில் மாற்றம் கொண்டு வரும் தேர்தல் ஆணையர் நியமன மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை மத்திய அமைச்சரவை பரிந்துரையின் அடிப்படையில் குடியரசு தலைவர் நியமித்து வருகிறார். இதனால் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதில் சட்டம் இயற்றவும், அதுவரை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கி குழு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் என்று கூறி உத்தரவிட்டனர்.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்தல் ஆணையர் நியமன மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அந்த மசோதா மீதான விவாதம் நடத்த முடியாத சூழல் நிலவியது. இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர், மற்ற தேர்தல் ஆணையர்கள் நியமனம், பணி வரையறை, பணிக் காலம், தேர்தல் ஆணைய பணி செயல்முறை உள்ளிட்டவை தொடர்பான மசோதாவை மாநிலங்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இன்று (டிச. 12) தாக்கல் செய்தார்.

புதிய மசோதாவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், மற்றும் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் நபர் என மூவர் குழு அமைக்கப்படும் என்றும், இந்த குழுவின் பரிந்துரைகளின் படி தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு குழு தேர்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மூவர் குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பதிலாக பிரதமர் நியமனம் செய்யும் நபர் இடம் பெறும் பட்சத்தில் தேர்தல் ஆணையர் தேர்வில் அரசின் ஆதிக்கம் இருக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். இந்த மசோதா, நிறைவேற்றப்பட்டால் தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதில் வெளிப்படை தன்மை இல்லாத சூழல் நிலவும் என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறப்பட்டது.

தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாவை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மாநிலங்களவையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க : சிபிஎஸ்இ 10, +2 பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

Last Updated :Dec 12, 2023, 7:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.