ETV Bharat / bharat

Bathinda : பதின்டா ராணுவ மைய துப்பாக்கிச் சூடு வழக்கு - ராணுவ வீரர் கைது!

author img

By

Published : Apr 17, 2023, 12:59 PM IST

Updated : Apr 17, 2023, 1:07 PM IST

Army
Army

பதின்டா ராணுவ முகாமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் ஒருவரை பஞ்சாப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப் : பதின்டா ராணுவ மையத்தில் தமிழக வீரர்கள் இருவர் உள்பட 4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். பஞ்சாப், பதின்டா ராணுவ மையத்தில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த சாகர் பன்னே, கமலேஷ், யோகேஷ் குமார், சந்தோஷ் நகரா ஆகிய நான்கு பேரும் பீரங்கிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது. இதில் கமலேஷ் சேலம் மாவட்டம், நங்கவள்ளி அடுத்த பெரிய வனவாசி பனங்காடு கிராமத்தை சேர்ந்தவர்.

மற்றொரு வீரர் யோகேஷ் குமார் தேனி மாவட்டம், தேவாரம் அடுத்த மூனாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். துப்பாக்கிச் சூட்டில் உயிர்ழந்த மற்ற இரண்டு வீரர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள்.

துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு 28 ரவுண்டுகள் கொண்ட இன்சாஸ் ரக துப்பாக்கி காணாமல் போனதாக ராணுவம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதாக பஞ்சாப் போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடந்த பகுதி சீல் வைக்கப்பட்டு, பஞ்சாப் காவல் துறை மற்றும் ராணுவ அதிகாரிகள் இணைந்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த இடத்தின் அருகில் 19 காலி குண்டுகளுடன் கூடிய இன்சாஸ் ரக துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது. அந்த துப்பாக்கி மற்றும் அதில் இருந்த குண்டுகள் அனைத்தும் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தீவிரவாத முகாந்திரம் இருப்பதாக பஞ்சாப் போலீசார் தரப்பில் முதலில் கூறப்பட்டது.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் வெள்ளை நிற குர்தா - பைஜாமாஸ் அணிந்த இருவர் காணப்பட்டதாகவும், இருவரும் முகத்தை துணியால் மறைத்து இருந்ததாகவும் கூறப்பட்டது. இருவரது கையில் துப்பாக்கி மற்றும் கோடாரி போன்ற கூர்மையான ஆயுதம் காணப்பட்டதாகவும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து அந்த இருவரும் காட்டுப் பகுதிக்குள் தப்பி தலைமறைவானதாக நேரில் கண்ட சாட்சி கூறியதாக ராணுவ மேஜர் அஸ்தூஷ் சுக்லா அளித்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் மீது பஞ்சாப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அதே பதின்டா ராணுவ மையத்தை சேர்ந்த ராணுவ வீரரை பஞ்சாப் போலீசார் கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்ட ராணுவ வீரர் குறித்த எந்த அடையாளமும் போலீசாரால் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்தில் பஞ்சாப் போலீசார், இந்திய ராணுவ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டேவிடம் கேட்டு அறிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : Jagadish Shettar: காங்கிரஸில் இணைந்த மாஜி முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்.. பாஜகவுக்கு பெரும் பின்னடைவு!

Last Updated :Apr 17, 2023, 1:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.