ETV Bharat / bharat

மத்திய அரசு மீது கூட்டணிக் கட்சி முதலமைச்சர் ரங்கசாமி புகார்

author img

By

Published : Sep 22, 2021, 6:38 AM IST

ஒன்றிய அரசு
ஒன்றிய அரசு

மத்திய அரசு சலுகைகள் கொடுக்காததால் புதுச்சேரியை விட்டு பல்வேறு தொழிற்சாலைகள் வெளியேறி விட்டதாக ஏற்றுமதியாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி: நாட்டின் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் 'வாணிஜ்ய உத்சவ்" என்ற பெயரில் ஏற்றுமதியாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சி, புதுச்சேரி பல்கலைக்கழகம் கலாச்சார மையத்தில் நேற்று (செப்.21) நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு மாநாடு, கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

முதலமைச்சர் குற்றச்சாட்டு

விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரியில் அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கையால் கரோனா தொற்று குறைந்து, தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இருந்தபோதிலும் கடந்த காலங்களில் மத்திய அரசு சில சலுகைகளை கொடுக்காததால், புதுச்சேரியை விட்டு பல்வேறு தொழிற்சாலைகள் வெளியே சென்றுவிட்டன.

ஏற்றுமதியாளர்கள் மாநாடு
புதுச்சேரியில் ஏற்றுமதியாளர்கள் மாநாடு

வருங்காலங்களில் ஏற்றுமதியை இரண்டாயிரம் கோடியில் இருந்து நான்கு ஆயிரம் கோடியாக உயர்த்த வேண்டும். புதுச்சேரியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. அலுவலர்கள் தொழிற்சாலைகளை தொடங்க எளிய முறையில் அனுமதி வழங்க வேண்டும். முதலீட்டாளர்களை அலைக்கழிக்க கூடாது. தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதை எளிதாக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட தமிழிசை

முதலமைச்சரை தொடர்ந்து பேசிய ஆளுநர் தமிழிசை, ' "வாணிஜ்ய உத்சவ்" என்ற நிகழ்ச்சியின் பெயரை வணிக திருவிழா என தமிழில் அனைவருக்கும் புரியும்படி வைத்திருக்க வேண்டும். அலுவலர்கள் வருங்காலங்களில் இவற்றை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், கரோனா காலத்திலும் புதுச்சேரியில் ஏற்றுமதி சிறப்பாக நடைபெற்றது. புதுச்சேரியில் முன்பு தொழிற்சாலைகள் நிறைந்திருந்தது. தற்போது தொழிற்சாலைகள் குறைந்துள்ளது உண்மை. முதலமைச்சர் கூறிய கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் 150 நாடுகளுக்கு மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் ஏற்றுமதி செய்த மிகப்பெரிய நாடு இந்தியா. புதுச்சேரியை மேம்படுத்துவதற்கு அனைத்து உதவிகளையும் பிரதமர் மோடி செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். மத்திய, மாநில அரசுகள் இணைந்து புதுச்சேரியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க: 'நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் விரைவாக ஒப்புதல் அளிப்பார்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.