ETV Bharat / bharat

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டவர்களின் செல்போன்கள் எரிந்த நிலையில் மீட்பு!

author img

By ANI

Published : Dec 17, 2023, 1:42 PM IST

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டவர்களின் செல்போன்கள் எரிந்த நிலையில் மீட்பு
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டவர்களின் செல்போன்கள் எரிந்த நிலையில் மீட்பு

Parliamentary Security Breach Issue: நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய செல்போன் பாகங்கள் முழுவதுமாக எரிந்த நிலையில் ராஜஸ்தானில் மீட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், டிச. 13ஆம் தேதி நாடாளுமன்ற தாக்குதல் தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது அவையின் பார்வையாளர்கள் பகுதியில் இருந்த இரண்டு பேர் மக்களவை எம்.பி.க்கள் இருப்பிடத்திற்குள் குதித்து களேபரத்தில் ஈடுபட்டனர்.

இருவரையும் பிடித்து மக்களவை உறுப்பினர்கள் அவை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அதேபோல், நாடளுமன்றத்திற்கு வெளியே வண்ண புகைகளை வீசி பாதுகாப்பு குளறுபடிகளை ஏற்படுத்திய பெண் உள்பட 2 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

நாடாளுமன்றத்திற்குள் களேபரத்தில் ஈடுபட்டவர்கள் சாகர் சர்மா, மனோரஞ்சன் என்றும், நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமோல் ஷிண்டே (25) மற்றும் நீலம் தேவி (42) என அடையாளம் காணப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிஆர்பிஎப், டி.ஜி அனிஷ் தயால் சிங் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடியில் ஈடுபட்டவர்களை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் விசாரணை நடத்த, சிறப்புக் குழு 15 நாட்கள் காவல் கோரியது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நான்கு பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து அனுமதி அளித்தனர். நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட சம்பவம் நன்கு திட்டமிடப்பட்ட சதி என டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த லலித் ஜா கடந்த டிச. 14ஆம் தேதி, டெல்லி காவல் நிலையத்திற்கு தானாகவே வந்து சரணடைந்தார். கைது செய்யப்பட்ட லலித் ஜா, பாதுகாப்பு குளறுபடிக்கு மூளையாக செயல்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படும் நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். லலித் ஜாவை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரிய நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவத்தன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தவற்றை படம் பிடிப்பதற்காக லலித் ஜா காத்திருந்ததாகவும், பின்னர் அவர்களை போலீசார் கைது செய்ததும், ராஜஸ்தானின் குச்சமனில் தனது நண்பர் மகேஷின் அறைக்குச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் இருவரும் முகநூல் மூலம் தொடர்பில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரம், தன்னுடைய சகாக்களின் மொபைல் போன்களை எரித்ததாகவும் லலித் ஜா கூறியுள்ளார். இதனை டெல்லி காவல்துறையினர் உறுதி செய்து வரும் நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களின் தொலைபேசி பாகங்கள் முழுவதுமாக எரிந்த நிலையில், ராஜஸ்தானில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் தரப்பில், “நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள், பாதுகாப்பு விதிமீறல் செயலில் ஈடுபடுவதற்கு முன், தாங்கள் எப்படியும் போலீசாரால் கைது செய்யப்படுவோம் என்பதால், முக்கியமான ஆதாரங்கள் ஏதும் போலீசாருக்கு கிடைத்து விடக்கூடாது என தங்களது மொபைல் போன்களை லலித் ஜாவிடம் ஒப்படைத்துள்ளனர். டெல்லி வருவதற்கு முன்பு லலித் ஜா, 5 போன்களையும் எரித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எம்.பிக்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா திடீர் கடிதம்! என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.