ETV Bharat / bharat

கரோனா தடுப்பூசித் திட்டம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக்கூட்டம்

author img

By

Published : Jun 5, 2021, 8:25 AM IST

Updated : Jun 5, 2021, 8:51 AM IST

கரோனா தடுப்பூசி குறித்து பாரதப் பிரதமர் மோடி ஆய்வு
கரோனா தடுப்பூசி குறித்து பாரதப் பிரதமர் மோடி ஆய்வு

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழுவின் ஆய்வுக் கூட்டத்தில், நாடு தழுவிய கரோனா தடுப்பூசித் திட்டம் முன்னேற்றம் குறித்து நேற்று (ஜூன் 4) விவாதிக்கப்பட்டது.

டெல்லி: கரோனா தடுப்பூசித் திட்டம் முன்னேற்றம் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தற்போது தடுப்பூசிகள் கிடைப்பது குறித்தும், அதை அதிகரிப்பது குறித்தும் பாரதப் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். பல்வேறு தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் முயற்சிகள் குறித்தும் அவர் யோசனை தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் கூறுகையில், "தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் இந்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. மேலும் உற்பத்தி அலகுகளுக்கு வசதி செய்துகொடுத்தல், நிதியளித்தல், மூலப்பொருள்களை வழங்குதல் போன்றவற்றில் அரசு உதவி புரிந்துவருகிறது" எனத் தெரிவித்துள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்குச் செலுத்தப்படும் தடுப்பூசி பாதுகாப்பு நிலை குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார்.

பல்வேறு மாநிலங்களில் வீணடிக்கப்படும் தடுப்பூசி குறித்து ஆய்வுமேற்கொண்ட மோடி, தடுப்பூசி வீணடிக்கும் எண்ணிக்கை இன்னும் அதிகமாக உள்ளது என வேதனை தெரிவித்தார். மேலும் அவற்றைச் சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

தடுப்பூசி போடுவதற்கான செயல்முறையை மக்கள் மேலும் எளிமையாக அணுகுதல் தொடர்பாக தொழில்நுட்பம் ரீதியாக எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்கள் பிரதமருக்கு விளக்கமளித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசி குறித்து பாரதப் பிரதமர் மோடி ஆய்வு
கரோனா தடுப்பூசி குறித்து பாரதப் பிரதமர் மோடி ஆய்வு

"தடுப்பூசி கிடைப்பது குறித்து மாநிலங்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துவது குறித்து அலுவலர்கள் பிரதமருக்கு விளக்கமளித்தனர். மக்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படாத வகையில் இந்தத் தகவல்களை மாவட்ட அளவிற்கு அனுப்புமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர்கள் பிரதமருக்கு விளக்கினர்" என்றும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள் துறை அமைச்சர் அமித் ஷா, நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்களும், பிரதமரின் முதன்மைச் செயலர், அமைச்சரவைச் செயலர், சுகாதாரச் செயலர் உள்பட பல உயர் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

Last Updated :Jun 5, 2021, 8:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.