ETV Bharat / bharat

இந்தியா - வங்கதேச எல்லையில் அதிகரிக்கும் போலி அடையாள அட்டை தயாரிப்பு..! என்ஐஏ அதிகாரி அதிர்ச்சி தகவல்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 12:14 PM IST

Fake ID Card Making Gang
அதிகரிக்கும் போலி அடையாள அட்டை தயாரிப்பு

Fake ID Card Making Gang: இந்தியா - வங்கதேச எல்லைப்பகுதியில் ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட போலி ஆவணங்கள் தயாரிக்கும் குற்றம் அதிகளவில் அரங்கேறி வருவதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியா - வங்கதேச எல்லையில் வசிக்கும் மனித கடத்தல்காரர்கள் சிலர், மனித கடத்தல் மற்றும் எல்லை தாண்டிச் செல்லும் நபர்களுக்கு போலி அடையாள ஆவணங்கள் தயாரித்து கொடுக்கும் மோசடி செயலில் ஈடுபட்டு வருவதாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரி ஒருவர் ஈடிவி பாரத் செய்திகளிடம் கூறுகையில், "எல்லை தாண்டி வரும் நபர்களுக்கு இந்தியாவில் நுழைய மனித கடத்தல்காரர்கள் ஆதார் கார்டு முதல் வாக்காளர் அட்டை வரை உள்ள போலி ஆவணங்கள் அனைத்தையும் ஏற்பாடு செய்து தருகின்றனர் என தெரிவித்தார். மேலும் என்ஐஏ நடத்திய விசாரணையில், இந்தியா - வங்கதேச எல்லைப்பகுதி, நாடு தாண்டி வரும் நபர்களைக் கடத்த மனித கடத்தல்காரர்களின் போக்குவரத்துப் பாதையாகவே மாற்றியுள்ளதாதவும் தெரிய வந்துள்ளது.

இந்தியா - வங்கதேச எல்லைப்பகுதியில் வங்கதேசம் மற்றும் மியான்மார் நாட்டினைச் சேர்ந்தவர்களைக் கடத்தும் மனித கடத்தல் தொடர்பாக என்ஐஏ தனி கவனம் செலுத்தி, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், மனித கடத்தலில் ஈடுபடும் கும்பல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மற்றும் எல்லைக்கு அப்பால் உள்ள கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக மனித கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு இந்தியா - வங்கதேச எல்லைப்பகுதி பெரிய நெட்வொர்க்கின் இணைப்புப்பகுதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் எல்லை தாண்டி கடத்தப்படும் நபர்களுக்கு போலியான இந்திய அடையாள ஆவணங்களை ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர் என என்ஐஏ விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை, கடந்த 2023ஆம் ஆண்டு டிச.29ஆம் தேதி இந்தியா - வங்கதேச எல்லையில் திரிபுரா வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 4 குற்றவாளிகள் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரும் வங்கதேசத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள். இவர்கள் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்காக சர்வதேச எல்லைக்கு அப்பால் உள்ள கடத்தல்காரர்களுடன் ஒருங்கிணைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும், இதே போன்று அக்டோபர் மாதம் கவுகாத்தியில், என்ஐஏவால் மனித கடத்தலில் ஈடுபடும் நபர்கள், திரிபுரா போலீசாருடன் இணைந்து கைது செய்யப்பட்டுள்ளனர். நவம்பரில், மனித கடத்தல் கும்பல் மீது எடுக்கப்பட்ட நாடு தழுவிய நடவடிக்கையில் 29 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் வடகிழக்கு திரிபுராவின் பல மாவட்டங்களில் செயல்படும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சிண்டிகேட்களைச் (well organized syndicates) சேர்ந்த மோசடியில் ஈடுபடுபவர்களின் உத்தரவின் பேரில், இந்த மனித கடத்தல் செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள். இவர்களின் நெட்வொர்க் இந்தியாவில் உள்ள பிற பகுதிகளில் செயல்பாட்டாளர்களுடன் உள்ளது" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, 2023ஆம் ஆண்டு டிச.8ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில், சென்னையிலிருந்து இலங்கைக்கு, போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி பயணம் செய்ய முயன்ற, திபெத் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்த சம்பவம் அரங்கேறியது.

தற்போது போலி ஆவணங்கள் தயாரிக்கும் செயல்களும், மனித ஊடுருவல் செயல்களும் அதிகரித்து வருகின்றது. இதனை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: ரூ.2000 நோட்டுகளை மீண்டும் பயன்படுத்தலாம்..! - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.