ETV Bharat / bharat

இந்தியாவை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ஸ்வீடனில் மர்ம மரணம்.. நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2023, 11:02 PM IST

இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ரோஷ்னி ஸ்வீடனில் உயிரிழப்பு
இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ரோஷ்னி ஸ்வீடனில் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ரோஷ்னி அவரது ஆராய்ச்சி படிப்பிற்காக ஸ்வீடனில் வசித்து வந்த நிலையில், கடந்த அக்.12 ஆம் தேதி இறந்ததாக அந்நாட்டு அரசு இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் ரோஷ்னி மற்றும் அவரது உறவினர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துர்காபூர்: மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள டிபிஎல் டவுன்ஷிப்பைச் சேர்ந்தவர் ரோஷ்னி(32). அவர் துர்காபூரில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பர்தமான் ராஜ் கல்லூரியில் விலங்கியல் ஹானர்ஸ் பட்டம் பெற்றுள்ளார். சிறுவயது முதல் படிப்பில் அதிகளவில் ஆர்வம் செலுத்தி வந்த ரோஷ்னி, மாவட்டத்தின் முதல் மாணவியாகவும் இடம்பிடித்தார். பின்னர், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா பல்கலைகழகத்தில் பயோ டெக்னாலஜியில் பட்டம் பெற்று ஸ்வீடனில் உமியா பல்கலைகழகத்தில் படிக்கும் வாய்ப்பை பெற்றார்.

நரம்பியல் துறையில் அவரது ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வந்த ரோஷ்னி, அவரது படிப்பின் இறுதிக்கட்டத்தில் இருந்துவந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செப்.29ஆம் தேதி தனது தாய் மம்தா தாஸுடன் நன்றாக பேசியுள்ளார். ஆனால் அது தான் ரோஷ்னியின் கடைசி வார்த்தைகள் என அவரது தாயார் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

அக்.12ஆம் தேதி ஸ்வீடன் நாட்டுத் தூதரகம் இந்திய தூதரகத்திடம் ஆராய்ச்சி படிப்பிற்காக ஸ்வீடன் வந்த மாணவி ரோஷ்னி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் உயிரிழந்தது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் இந்திய தூதரகம் மேற்கு வங்கத்தில் இருக்கும் ரோஷ்னி குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் ரோஷ்னி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த ரோஷ்னியின் பெற்றோர்
உயிரிழந்த ரோஷ்னியின் பெற்றோர்

இது குறித்து ரோஷ்னியின் தாயார் மம்தா கூறுகையில், "2018 ஆம் ஆண்டில் என் மகள் ஆராய்ச்சி படிப்பிற்காக ஸ்வீடன் சென்றாள். பொதுவாகவே என் மகள் நன்றாக படிக்கக் கூடிய குழந்தை. என் மகளுடன் நான் கடைசியாக செப்.29 ஆம் தேதி பேசினேன். அப்போது நன்றாகத் தான் பேசினாள். எந்த பிரச்னையும் இல்லை. பின்னர், என் மகள் என்னிடம் பணம் கேட்டிருந்தாள். அதனை நான் கடந்த அக்.06ஆம் தேதி அனுப்பி வைத்தேன். எப்போதும் பணம் அனுப்பினால் என் மகள் எனக்கு வந்தது வரவில்லை என தெரியப்படுத்துவாள். ஆனால் பணம் அனுப்பியப் பிறகு எந்த தகவலும் இல்லை. என் மகள் இறந்ததற்கான உரிய காரணம் வேண்டும். என் மகளின் உடலை எப்படியாவது இந்தியாவுக்கு மீட்டுத் தாருங்கள்" எனக் கதறி அழுது கொண்டு பேசியது காண்போரை கண்கலங்கச் செய்தது.

தொடர்ந்து பேசிய ரோஷ்னியின் சகோதரி சுப்ரதிக் தாஸ், "கடந்த சில தினங்களுக்கு முன்பு நன்றாகப் பேசினாள். அவள் கட்டாயம் கொலை செய்யப்பட்டிருக்கிறாள். மேலும் அங்கு சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். இது குறித்து இந்திய தூதரகம் தலையிட்டு ரோஷ்னி மறைவுக்கு நியாயம் பெற்றுத் தரவேண்டும்" எனத் தெரிவித்தார்.

ரோஷ்னியின் மறைவு செய்தியை அறிந்த பர்த்வான் துர்காபூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுரீந்தர் சிங் அலுவாலியா, அவரது உடலை இந்தியாவுக்கு மீட்டு வரும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். இது குறித்து மத்திய அரசு மூலமாக அந்நாட்டிற்கு இந்திய தூதரகம் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறார் துர்காபூர் எம்.பி. ரோஷ்னி உயிரிழந்ததையடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரோஷ்னியின் உயிரிழப்பை கடந்து அவரது உடலை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கக் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வாக்காளர்களை கவரும் தேர்தல் வாக்குறுதிகள்.. காங்கிரஸின் கர்நாடகா பார்முலா.. கேசிஆரின் புதிய யுத்தி.. தெலங்கானாவில் சூடுபிடிக்கும் அரசியல் களம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.