மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பை அடுத்த கட்கோபர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீசிய கடுமையான புழுதிப் புயலால் ராட்சத விளம்பர பேனர் விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவ நேரத்தில் அப்பகுதியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த ராட்சத விளம்பர பலகையில் சிக்கிக் கொண்டனர்.
தொடர் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 14 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், விளம்பர பலகை விழுந்த விபத்தில் மேலும் இரண்டு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. விளம்பர பலகை விழுந்ததில் சிக்கிக் கொண்ட காரில் இருந்து 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மருத்துமனையில் 40க்கு மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 30 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மீதமுள்ளவர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராட்சத விளம்பர பேனர் விழுந்த விவகாரத்தில் அதன் உரிமையாளர் பாவேஷ் பிடே உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் பாவேஷ் பிடெ மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாவேஷ் கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். அவர் தன் மீது 23 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த ஜனவரி மாதம் அவர் மீது முலுந்த் காவல் நிலையத்தில் பாலியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உதவியாளரிடம் ரூ.32 கோடி சிக்கிய விவகாரம்! பணமோடி வழக்கில் ஜார்கண்ட் அமைச்சர் கைது! - Jharkhand Minister Arrest