ETV Bharat / bharat

அவசரச் சட்ட விவகாரம் : நாளை சந்திரசேகரராவை சந்திக்கும் கெஜ்ரிவால்!

author img

By

Published : May 26, 2023, 7:56 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தை எதிர்த்துப் போராட பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களிடம் ஆதரவு திரட்டி வரும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், நாளை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை சந்திக்கவுள்ளார். அதேபோல் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, கார்கேவை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளார்.

ordinance issue
அவசர சட்டம்

டெல்லி: டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால், அதன் சட்டம் ஒழுங்கு மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆட்சி அதிகாரம் தொடர்பாக டெல்லி அரசுக்கும் டெல்லி துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தன.

இதனிடையே கடந்த 2021ஆம் ஆண்டு 'தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு திருத்தச் சட்டம்' நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, டெல்லி அரசு எந்த முடிவு எடுத்தாலும், துணை நிலை ஆளுநரின் கருத்தைக் கேட்ட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. அதன் பிறகு அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு கூட, துணைநிலை ஆளுநரின் அனுமதியைப் பெற வேண்டிய நிலை டெல்லி அரசுக்கு ஏற்பட்டது. இதனால், டெல்லி அரசுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வந்த நிலையில், ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் இச்சட்டத்தை ஏதிர்த்து டெல்லி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியது. அதன்படி, டெல்லியில் ஆளுநரை விட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என தீர்ப்பளிக்கப்பட்டது. டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லை என்றாலும், சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது என்றும், ஜனநாயக நாட்டில் அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் டெல்லி அரசுக்கே உள்ளது என தீர்ப்பு வழங்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பு வழங்கிய சில நாட்களுக்குப் பிறகு, இந்த தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இந்த அவசர சட்டம், டெல்லி அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட ஏ பிரிவு அதிகாரிகள் நியமனம் மற்றும் மாற்றத்தில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்குகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மத்திய அரசை எதிர்த்துப் போராட பல்வேறு மாநில தலைவர்களிடமும் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்ட்ரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்தித்து தனக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து இன்று(மே.26) காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல்காந்தியை சந்திக்க கெஜ்ரிவால் நேரம் கேட்டிருக்கிறார். இதையடுத்து, தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவை நாளை சந்திக்கவுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கெஜ்ரிவால், நாளை ஹைதராபாத் சென்று தெலங்கானா முதலமைச்சரை சந்தித்து, மத்திய அரசின் அரசியல் சாசனத்திற்கு எதிரான அவசர சட்டத்தை எதிர்த்துப் போராட டெல்லி அரசுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Arvind Kejriwal: சரத் பவார் - அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு... தேசிய அரசியலில் ஏற்பட உள்ள திருப்பம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.