ETV Bharat / bharat

Lahore sector war 1965: இந்தியா vs பாகிஸ்தான் : இந்திய ராணுவத்தின் லாகூர் செக்டார் தாக்குதல் தினம் இன்று.!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 1:13 PM IST

Lahore sector war 1965: கடந்த 1965ஆம் ஆண்டு இந்திய ராணுவம் எல்லை தாண்டிச் சென்று லாகூர் செக்டார் பகுதியில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் ராணுவத்தைக் கதிகலங்கச் செய்த தினம் இன்று. இந்த லாகூர் செக்டார் தாக்குதலில் ஏராளமான பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்ட நிலையில் போரில் இருந்து பின்வாங்கிய பாகிஸ்தான் இந்த நாளை (செப்டம்பர் 6) அந்நாட்டின் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கிறது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: இந்தியா - பாகிஸ்தான் எல்லை பிரச்சனை இன்று நேற்று நடப்பது அல்ல என்பது, அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால் எப்போதெல்லாம் என்னவெல்லாம் நடந்தது என்பதுதான் இந்திய ராணுவ வரலாற்றின் முக்கியப் பக்கங்கள். இந்திய ராணுவத்தின் மலைப்பிரிவு ராணுவப்படை உலகிலேயே மிகவும் சிறந்த ஆளுமை கொண்ட படை எனக்கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி இந்தியாவின் தரைப்படை, விமானப்படை உள்ளிட்ட அனைத்தும் தனித்துவமான சிறப்புகளுடன் நாட்டிற்காக சேவையாற்றி வருகிறது. இந்நிலையில் நாட்டின் இந்த ராணுவப்படைகள் இன்றுவரை பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்துக்கொண்டுதான் வருகிறது.

அந்த வகையில் கடந்த 1965ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதிகளில் அறிவிக்கப்படாத போரை நடத்தியுள்ளது. குறிப்பாக அதே ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி ஜம்மு அடுத்த அக்னூர் செக்டரில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு எல்லை தாண்டாமல் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துவந்த நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.

இந்த சூழலில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் ஒரு அடி எடுத்து வைத்தாலும் இந்தியா தனது வீறுகொண்ட தாக்குதலைக் கொடுக்கும் எனவும், இதைப் பாகிஸ்தானால் எதிர்கொள்ள முடியாது எனவும் கூறினர். தொடர்ந்து இந்திய ராணுவம் தனது வீர தாண்டவத்தைப் பாகிஸ்தானின் லாகூர் செக்டரில் நடத்தத் திட்டமிட்டது.

அதன் படி ஆரம்பத்தில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லையில் தாக்குதல் நடத்திய இந்திய வீரர்கள் செப்டம்பர் 5 மற்றும் 6 இடைப்பட்ட நள்ளிரவில் பஞ்சாபின் பல்வேறு இடங்களில் சர்வதேச எல்லையைத் தாண்டி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து லாகூர் செக்டரில் நுழைந்த இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தை வதம் செய்து நாடு திரும்பியது.

இந்திய ராணுவத்தின் 15 தரைப்படை தாக்குதல் மற்றும் 4 மலைப்படை தாக்குதலைச் சமாளிக்க முடியாத பாகிஸ்தான் போரில் இருந்து பின் வாங்கியது. ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்கொள்ளாமல் இந்திய ராணுவம் பஞ்சாப் மாநிலத்தின் சர்வதேச எல்லைகளில் ஏன் தாக்குதல் நடத்தியது என்ற கேள்வி எழலாம்.

பாகிஸ்தான் படையின் கவனத்தைத் திசை திருப்ப இந்திய ராணுவம் மேற்கொண்ட போர் யுக்தி அது. பாகிஸ்தான் தனது விமானப்படை உள்ளிட்ட அனைத்தையும் ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதியில் வைத்துக்கொண்டு இந்திய ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு அங்கிருந்தவாறு பாகிஸ்தான் ராணுவத்தை எல்லை தாண்ட விடாமல் இந்திய ராணுவம் பதிலடி மட்டும் கொடுத்து வந்தது.

இந்த சூழலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைகளில் தங்கள் படைபலத்தைக் கவனிக்காத பாகிஸ்தானை இந்திய ராணுவம் எல்லை தாண்டி தாக்கியது. அதே நேரம் ஜம்மு காஷ்மீர் எல்லைகளிலும் தங்கள் தாக்குதலின் வீரியத்தைக் கூட்டியது இந்தியா. இந்த இரண்டு எல்லைகளிலும் நடைபெற்ற இந்திய ராணுவத்தின் தாக்குதலைப் பாகிஸ்தானால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

அதனை தொடர்ந்து கடந்த 1966ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் இந்த ஒப்பந்ததை இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாக முன்நின்றது.

இந்திய ராணுவத்தின் முதல் எல்லை தாண்டிய தாக்குதல் என்றால் லாகூர் செக்டார் தாக்குதல்தான். இந்த நாள் இந்திய ராணுவ வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள். இந்த போரின் போது வீரமரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையில் இந்திய ராணுவம் மரியாதை செலுத்துகிறது.

இதையும் படிங்க: தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழகத்தின் காட்வின், மாலதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.