ETV Bharat / bharat

IND VS Ire 2nd T20 : அயர்லாந்தை ஊதித்தள்ளிய இந்திய வீரர்கள்! தொடரை கைப்பற்றியது!

author img

By

Published : Aug 21, 2023, 6:52 AM IST

Cricket
Cricket

அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

டப்ளின் : அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஒவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதில் ட்க்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி அதே டப்ளின் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் பவுல் ஸ்டரிலிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் இன்னிங்சை யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடங்கினர்.

நிதினமாக ஆடிய ஜெய்ஸ்வால் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய திலக் வர்மாவும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஒரு ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுன் கைகோர்த்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் இந்திய அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்த முயன்றனர்.

ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பிய இருவரும் அவ்வப்போது சிக்சர்களை அடித்து குழுமியிருந்த ரசிகர்களை குஷிப்படுத்தினர். அடித்து ஆடிய சாம்சன் 40 ரன்களில் அயர்லாந்து வீரர் ஜெஞ்சமீன் ஒயிட்டிம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனிடையே நிலைத்து நின்று விளையாடிய ருதுராஜ் அரைசதம் கடந்தார்.

தன் பங்குக்கு 58 ரன்கள் எடுத்து கொடுத்து ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். 18 ஓவர்கள் வரை 130 ரன்களுக்கு உள்ளேயே சுற்றிக் கொண்டு இருந்த இந்திய அணியின் ஸ்கோர் வேகத்தை இறுதியில் களமிறங்கிய ரிங்கு சிங் மற்றும் ஷிவம் துபே மளமளவென உயர்த்தினர். அதிரடியாக ஆடிய ரிங்கு சிங் அடுத்தடுத்து 3 சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.

மறுபக்கம் ஷிவம் துபேவும் தன் பங்குக்கு இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு வாண வேடிக்கை காட்டினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் 5 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என இந்திய வீரர்கள் 42 ரன்களை குவித்தனர்.

ஷிவம் துபே 22 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்றார். தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணி வீரர்களால், இந்திய பந்துவீச்சாளர்களின் வேகத்திற்கு ஈடுகொடுத்த விளையாட முடியவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்த வண்ணம் இருந்தது. தொடக்க வீரர் ஆண்ட்ரூ பால்பெர்னீ தவிர்த்து மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக விக்கெட் அணிவகுப்பு நடத்தினர்.

நிலைத்து நின்று ஆடிய ஆண்ட்ரூ பால்பெர்னீயும் தன் பங்குக்கு 72 ரன்கள் எடுத்து கொடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு அயர்லாந்து அணியால் 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரையும் கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 2-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கேப்டன் பும்ரா, ரவி பிஸ்னாய், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் ஒரு விக்கெடும் வீழ்த்தினர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க : Malinga : மும்பை இந்தியன்ஸில் மீண்டும் இணைகிறாரா மலிங்கா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.