ETV Bharat / bharat

India Corona: மீண்டும் உச்சம் தொட்ட கரோனா பாதிப்பு.. மீண்டும் லாக்டவுனை நோக்கி செல்கிறதா இந்தியா?

author img

By

Published : Apr 13, 2023, 10:07 AM IST

Corona
Corona

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லி : நாட்டில் மீண்டும் கரோனா பரவல் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 158 ஆக பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது. ஏறத்தாழ 8 மாதங்களுக்கு பின் நாட்டில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

நாட்டில் 44 அயிரத்து 998 பேர் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கரோனாவை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிஷீல்டு மருந்து உற்பத்தியை மீண்டும் துவக்கி உள்ளதாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடர் பூனாவாலா தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே 60 லட்சம் பூஸ்டர் டோஸ் கோவோவேக்ஸ் தடுப்பூசிகள் தயார் நிலையில் இருப்பதாகவும், 18வயதுக்கு மேற்பட்டவர்களும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வசதியாக தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முக கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

மேலும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுமாறும் பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தக் கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உள்ளார். நாட்டில் இதுவரை 4 கோடியே 42 லட்சத்து 10 ஆயிரத்து 127 பேர் தொற்று பாதிப்புக்குள்ளானதாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்து வரும் 10 முதல் 12 நாட்களில் நாட்டில் கரோனா பரவல் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது. ஒமிக்ரான் வைரசின் துணை மாறுபாடான XBB.1.16 வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக கூறப்பட்டு உள்ளது. இந்த மாறுபாடு மீதான தடுப்பூசியின் செயல்திறன் குறித்தும் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒமிக்ரானின் திரிபு XBB.1.16 வைரசின் தீவிரம் சராசரியை விட குறைவாக இருப்பதாகவும் நாடு முழுவதும் மருத்துவமனைகளள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. படுக்கை வசதிகள், ஆக்சிஜன், உயிர் காக்கும் கருவிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், கர்நாடாகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க : கங்கை நதிக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை - நாட்டில் முதல் முறையாக கொல்கத்தாவில் சோதனை ஓட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.