ETV Bharat / bharat

மிக்-21 போர் விமானம் தற்காலிக நிறுத்தம்

author img

By

Published : May 21, 2023, 10:01 AM IST

Updated : May 21, 2023, 10:16 AM IST

பலகட்ட சோதனைகளுக்கு பிறகே மிக்-21 போர் விமானம் இயக்கப்படும்
பலகட்ட சோதனைகளுக்கு பிறகே மிக்-21 போர் விமானம் இயக்கப்படும்

ராஜஸ்தானில் நிகழ்ந்த மிக்-21 போர் விமான விபத்துக்குப் பிறகு, இனி பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே இந்தப் போர் விமானங்கள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: கடந்த 8ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமன்கர் பகுதியில் உள்ள குடியிருப்பின் மீது, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக்-21 என்ற போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், குடியிருப்பில் இருந்த இருவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்தப் போர் விமானம், வழக்கமான பயிற்சிக்காக சூரத்கர் விமானப் படை தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 50 மிக்-21 ரக போர் விமானங்களை இந்திய விமானப் படை தற்காலிகமாக தரை இறக்கி உள்ளது. மேலும், தற்காலிகமாக கையிருப்பில் உள்ள அனைத்து மிக்-21 ரகப் போர் விமானங்களும், தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் அனைத்து மதிப்பீடுகளும் சரியாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே, மிக்-21 போர் விமானங்கள் பறப்பதற்கும், பயிற்சி எடுப்பதற்கும் அனுமதிக்கப்படும் என இந்திய விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1960ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சோவியத் விமானங்களால் இதுவரை 400 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பல்வேறு விபத்துகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்துள்ள இந்தப் போர் விமானம், இந்திய விமானப் படையால் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 870 மிக்-21 போர் விமானங்கள், இந்திய விமானப் படையின் பலத்தை அதிகரிக்க வாங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்த மிக்-21 போர் விமானங்கள், குறைந்த அளவிலான பாதுகாப்பு அம்சங்களையே கொண்டுள்ளன. அதிகாரப்பூர்வத் தரவுகளின் அடிப்படையில், கடந்த 60 ஆண்டுகளில் 400 விபத்துகளை மிக்-21 ரகப்போர் விமானங்கள் சந்தித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. தற்போதைய நிலையில், 3 மிக்-21 போர் விமானப் படைப் பிரிவுகளையும், 50 போர் விமானங்களையும் இந்திய விமானப் படை கொண்டுள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், மீதம் உள்ள மிக்-21 போர் விமானங்களை படிப்படியாக அகற்ற, இந்திய விமானப்படை 3 ஆண்டுகளை இலக்காக நிர்ணயித்துள்ளது. அதேபோல், அடுத்த 5 ஆண்டுகளில் மூன்று படைப்பிரிவுகளுக்குச் சொந்தமான மிக்-29 ரகப் போர் விமானங்களை படிப்படியாக குறைக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.

மேலும், கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்திய விமானப் படையின் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், 83 தேஜஸ் ஜெட்களை வாங்குவதற்காக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோல், ஏற்கனவே 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கி இருந்தது. அது மட்டுமல்லாமல், 114 நடுத்தரப் பங்கு வகிக்கும் போர் விமானங்களை வாங்கவும் இந்தியா முற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அருணாச்சலில் 12 ஆண்டுகளில் 8 ஹெலிகாப்டர் விபத்துகள்: 62 பேர் உயிரிழப்பு

Last Updated :May 21, 2023, 10:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.