ETV Bharat / bharat

கரோனாவை தடுப்பு மருந்து இல்லாமலும் கட்டுப்படுத்தலாம் - எய்மஸ் இயக்குநர்

author img

By

Published : Nov 12, 2020, 9:55 PM IST

AIIMS Director
AIIMS Director

கரோனா பரவல் குறித்தும் தடுப்பு மருந்துகள் குறித்தும் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா அளித்துள்ள பேட்டியில், வைரஸ் பெரியளவில் மாற்றமடையவில்லை என்றால் மக்களுக்கு ஒரு முறை தடுப்பு மருந்து வழங்குவதே போதும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து குறைந்துவருகிறது. இருப்பினும், அடுத்த குளிர்காலமும் பண்டிகை காலமும் ஒருசேர வருவதால் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் கரோனா பரவல் குறித்தும் தடுப்பு மருந்துகள் குறித்தும் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா அளித்துள்ள பேட்டியில், வைரஸ் பெரியளவில் மாற்றமடையவில்லை என்றால் மக்களுக்கு ஒரு முறை தடுப்பு மருந்து வழங்குவதே போதும் என்று கூறியுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா நேர்காணல்

கேள்வி: 2022ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ அல்லது 2021ஆம் ஆண்டின் இறுதிக்குளோ ஒரு தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்குள் மக்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அடைந்திருக்க மாட்டார்களா? மக்கள் இந்த கரோனா தொற்றை வழக்கமான சளி மற்றும் இருமல் போல கருத தொடங்கினால், அது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாதா?

பதில்: இதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன: ஒன்று வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் தடுப்பு மருந்து உடனடியாக கிடைக்க செய்வது.

அவ்வாறு தடுப்பு மருந்து கிடைத்து, அவற்றை அதிகம் ஆபத்தானவர்கள் (முதியவர்கள், இதய பிரச்னை உள்ளவர்கள், குழந்தைகள்) ஆகியோருக்கு வழங்க முடிந்தால் கரோனா பரவலையும் மரணங்களையும் குறைக்க முடியும்.

ஆனால், நாம் மக்களிடையே குறிப்பிட்ட ஒரு நல்ல அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் ஒரு கட்டத்தை எட்டலாம். தடுப்பு மருந்து இன்றியே இப்போது நல்ல நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக மக்கள் உணர்கிறார்கள். வைரஸ் பெரியளவில் மாற்றமடையவில்லை என்றால் மக்களுக்கு ஒரு முறை தடுப்பு மருந்து வழங்குவதே போதுமானதாக இருக்கும்.

பிரச்னை என்னவென்றால், வைரஸ் எவ்வாறு தன்னை தானே மாற்றிக்கொள்கிறது என்பதுதான். அது ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுத்தால் நாம் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்த சில மாதங்களில் வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும், அதன் அடிப்படையில் தடுப்பு மருந்து எத்தனை காலத்திற்கு ஒரு முறை தேவைப்படுகிறது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். பொதுவாக மக்களிடையே Herd immunity ஏற்பட்டால் நல்லதுதான். ஏனென்றால் அப்போதுதான் தடுப்பு மருந்தின் தேவை குறையும்.

கேள்வி: கோவிட்-19இல் இருந்து குணமடைந்தவர்களுக்கும்கூட நீண்டகால பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்று நீங்கள் எச்சரித்து உள்ளீர்கள்? கோவிட் -19 கரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது என்றால், குணமடைந்த நோயாளிகள் ஏன் பக்க விளைவுகளை எதிர்கொள்கின்றனர்?

பதில்: கரோனா வைரஸ் குடும்பத்தில் இதுவரை ஏழு வைரஸ்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அவற்றில் நான்கு வைரஸ்கள் வெறும் காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. மற்றவற்றில் ஒன்று SARS, அதை நாம் கட்டுப்படுத்திவிட்டோம். மற்றொன்று MERS, அது இவ்வளவு மோசமாக பரவாது.

கரோனா வைரஸ் குடும்பத்தில் இருந்து உலகளவில் மிக முக்கிய தொற்றாக மாறியது இந்த கோவிட் 19தான். முந்தைய பெருந்தொற்று இன்ஃப்ளூயன்ஸா எனப்படும் வைரசால் ஏற்பட்டது. இந்த கரோனா வைரஸ் ஒரு புதுவகையான வைரஸ், இது வௌவால்களில் இருந்து பரவியுள்ளது என்றே நாங்கள் கருதுகிறோம். இந்த வைரஸ், சுவாசக்குழாய் பகுதியை பாதிக்கின்றது.

இந்த வைரஸ் ரத்த நாளங்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது, மேலும் இதயத்தில் இருக்கும் ரத்த நாளங்களில் வீக்கம் ஏற்பட்டால், மாரடைப்புகூட ஏற்படலாம். இருப்பினும், நீண்ட கால பக்கவிளைவுகள் குறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால், இதுபோன்ற வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால் விரைவாக முற்றிலும் குணமடைந்துவிடலாம்.

கோவிட் -19இல் இருந்து குணமடையும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துவருகிறது. கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தியானம், யோகா போன்ற சிகிச்சை முறைகள் தேவைப்படலாம்.

கேள்வி: வைரஸ் தொற்றுகளில் இருந்து பொதுமக்களை BCG பாதுகாக்கிறது என்ற கருத்து உள்ளது. இதுபோன்ற BCG மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மக்களைப் பாதுகாக்க முடியுமா?

பதில்: BCG ஐ பொறுத்தவரை பல சர்ச்சைக்குரிய தகவல்கள் உள்ளன. BCG நோய் எதிர்ப்பு சக்தியை ஓரளவு அதிகப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இஸ்ரேலில் இருந்து வெளியாகியுள்ள ஆய்வில் BCG எவ்வித நன்மைகளையும் தருவதில்லை என்று கூறுகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இந்த BCG-ஆல் சில நன்மைகள் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இளையவர்கள் மற்றும் வயதானவர்கள் மீது இந்த BCG எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து அறிய தற்போது இரண்டு சோதனைகள் நடைபெற்றுவருகிறது. கோட்பாட்டளவில், இது அதிக நன்மை பயக்கலாம், ஆனால் தீர்க்கமான முடிவை எடுக்க நமக்கு அதிக தரவுகள் தேவை.

இதையும் படிங்க: "90% பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமாகவுள்ளது" - உலக சுகாதார அமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.