ETV Bharat / bharat

தேர்தல் நிதிப் பத்திரங்கள் நன்கொடை குறித்த விவரங்களை நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் - அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 1:51 PM IST

Poll Bond Details
பெறப்பட்ட தேர்தல் நிதிப் பத்திரங்கள் நன்கொடை குறித்த விவரங்களை நவ 15 க்குள் சமர்ப்பிக்க உத்தரவு

Poll Bond Details: உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடை குறித்த விவரங்களை நவம்பர் 15-க்குள் சமர்ப்பிக்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

டெல்லி: ஒரு நபர் அல்லது நிறுவனம் அரசியல் கட்சிகளுக்குப் பணமாக நன்கொடை அளிப்பதற்குப் பதிலாக, தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளிக்கும் திட்டத்தை 2016 மற்றும் 2017 நிதிச் சட்டம் மூலம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (RPA) 1951, நிறுவனங்கள் சட்டம் 2013, வருமான வரிச் சட்டம் 1961 மற்றும் வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA) 2010 ஆகிய நான்கு சட்டங்களில் மத்திய அரசு திருத்தங்களைக் கொண்டு வந்து, தேர்தல் பத்திரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன், அரசியல் கட்சிகள் 20,000 ரூபாய்க்கு மேல் வாங்கும் அனைத்து நன்கொடைகள் குறித்த தகவல்களையும் வெளிப்படையாக பகிர வேண்டும். மேலும், எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும், தங்களின் மொத்த லாபத்தில் 7.5 சதவீதம் அல்லது வருவாயில் 10 சதவீதம் அதிகமாக நன்கொடை அளிக்க அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் தற்போது, இந்த பத்திரங்கள் ரூ.1,000 முதல் ரூ.1 கோடி வரையிலான தேர்தல் நிதிப் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) குறிப்பிட்ட கிளைகளில் இருந்து KYC இணக்கமான கணக்கு மூலம் இந்திய குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள், இந்த தேர்தல் பத்திரங்கள் வாங்கிக் கொள்ளலாம். மேலும், அந்தப் பத்திரங்களைத் தனியாகவோ, பல பேர் கொண்ட குழுவாக சேர்ந்தோ வாங்க முடியும்.

இதன் பின்னர், அவற்றை தாங்கள் விரும்பும் கட்சிகளிடம் தனிநபர்களும், நிறுவனங்களும் சமர்பிக்கலாம். அந்த பத்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் வழங்கி, அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் பணமாக மாற்றிக் கொள்ளலாம். அந்தப் பத்திரங்கள் மூலம், தமக்கு நன்கொடை வழங்கியவர்களின் விவரங்களை, எவரிடமும் அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் திட்டம் மூலம் நிதியுதவி அளிப்பவர்கள் யார் என்பது தெரியாததால், அது ஊழலை ஊக்குவிப்பதாகக் கூறி, இந்த திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை அடுத்து, இந்த மனுக்கள் அனைத்தும் கடந்த நவம்பர் 2ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை அடங்கிய விவரத்தை, மூடி முத்திரையிடப்பட்ட உரையில், உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது. அதில், "உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தேர்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் தொடங்கப்பட்டது முதல் கடந்த செப்டம்பர் 30 2023 வரை, அந்த பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விவரங்களை நவ.15-ஆம் தேதிக்குள் மூடி முத்திரையிடப்பட்ட உரையில் சமர்பிக்க வேண்டும்.

மேலும், ஒவ்வொரு பத்திரத்தையும் வழங்கிய நன்கொடையாளர்கள் யார், ஒவ்வொரு பத்திரத்தின் விலை மதிப்பு என்ன ஆகியவை அடங்கிய முழுத் தகவல்கள் அந்த விவரத்தில் இடம் பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திரைப்படமாக உருவெடுக்கும் எலான் மஸ்க் வாழ்க்கை வரலாறு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.