ETV Bharat / bharat

கவுன்சிலர்கள் அமளி: டெல்லி மேயர் தேர்தல் 3-வது முறையாக ஒத்திவைப்பு!

author img

By

Published : Feb 7, 2023, 11:32 AM IST

டெல்லி மேயர் தேர்தல்
டெல்லி மேயர் தேர்தல்

டெல்லி மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பாஜக - ஆம் ஆத்மி உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் 3-வது முறையாக மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

டெல்லி: 250 வார்டுகளைக் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் 134 வார்டுகளை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, 15 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக பா.ஜ.கவிடம் இருந்த டெல்லி மாநகராட்சியை தட்டிப் பறித்தது.

மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடத்துவதற்கு முன்னதாக மாநகராட்சியின் தற்காலிக சபாநாயகராக பா.ஜ.க.வின் சத்ய சர்மா நியமிக்கப்பட்டது மற்றும் அரசின் ஆலோசிக்காமல் 10 நியமன கவுன்சிலர்களை நியமித்தது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக துணை நிலை ஆளுநர் சக்சேனா மற்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இடையே மோதல் போக்கு நிலவுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தால், மேயர் தேர்தலில் வெற்றி பெற துணை நிலை ஆளுநர் செயல்படுவதாகவும் அதற்காக ஆல்டர்மேன் என்று அழைக்கப்படும் இந்த நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக கடந்த இரு முறை கூடிய மாநகராட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று (பிப்.7) மூன்றாவது முறையாக கூடியது. தற்காலிக சபாநாயகர் சத்ய சர்மா நியமன உறுப்பினர்களும், மேயர், துணை மேயர், நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

இதற்கு ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக பாஜக கவுன்சிலர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து 3-வது முறையாக மேயர், துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறாமல் டெல்லி மாநகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: JEE MAIN 2023 : ஜெஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.