ETV Bharat / bharat

ராஜினாமா செய்து விட்டு அரசியல் பேசுங்கள் - ஆளுநர் தமிழிசையை விமர்சித்த வைத்திலிங்கம் எம்பி

author img

By

Published : Jul 12, 2023, 10:00 PM IST

Etv Bharat
Etv Bharat

புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அரசியல் பேச வேண்டும் எனில், பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் பேசலாம் என காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி காட்டம் தெரிவித்துள்ளார்.

நாராயணசாமி தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: ராகுல் காந்தி மீது மத்திய அரசு பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாக கூறி அதனை கண்டிக்கும் வகையில் புதுச்சேரி - கடலூர் சாலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் இன்று (ஜூலை 12) நடைபெற்றது. இந்த போராட்டத்தில், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, “புதுச்சேரி அரசு எரிவாயு சிலிண்டருக்கு மானியம் கொடுப்பதை தவிர்த்து வரியை குறைக்க வேண்டும். அரசியல் பேசுவேன் என கூறும் தமிழிசை சௌந்தரராஜன் வரியை குறைக்க வலியுறுத்தி இருக்கலாமே? ராஜஸ்தானில் காங்கிரஸ் 500 ரூபாய்க்கு கேஸ் கொடுப்பது போல் புதுச்சேரியில் கொடுக்கலாமே? வரியை குறைக்க தமிழிசை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அரசியல் பேசி இருக்கலாமே? கட்சிக்காக இல்லாவிட்டாலும், மக்களுக்காக அரசியல் பேச வேண்டியது தானே. அரசியலில் போனி ஆகாதவர்கள் தான் குறுக்கு வழியில் ஆளுநர்களாக உள்ளனர்” என்று சரமாரியாக குற்றம்சாட்டினார்.

மேலும் பேசிய அவர், “புதுச்சேரிக்கும் தெலங்கானாவுக்கும் தான் ஆளுநராக தமிழிசை உள்ளார். ஆனால், அவர் தமிழ்நாட்டிற்குச் சென்று ஏன் அரசியல் பேச வேண்டும்? அங்கு பேச வேண்டிய அவசியம் என்ன? அரசியல் பேச வேண்டும் என்றால் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் செய்யுங்கள். அதன் பிறகு தேர்தலில் நிற்க வேண்டும்” என தமிழிசைக்கு வைத்திலிங்கம் எம்பி சவால் விடுத்தார்.

தேர்தலில் நிற்க பயந்து கொண்டுதான் இந்த பதவியை வாங்கிக் கொண்டு வந்துள்ளதாகவும், தேர்தலில் தோற்ற பிறகுதான் இங்கு வந்துள்ளதாகவும், இப்போதும் தேர்தலில் நின்றாலும் தோற்றால் கூட ஜெயித்த மாதிரி நடிக்கக்கூடாது என்றார். ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை எவ்வளவு பின்னால் ஓடினார் தெரியுமா? என்றும் அங்கு அவர் ஏன் நிற்கவில்லை என்று கேள்வியெழுப்பிய அவர், அண்ணாமலை தனது வீரத்தை காட்டி தேர்தல் நிற்க வேண்டியது தானே? நின்றால் டெபாசிட் போய்விடும் என்ற பயத்தில் தான் அண்ணாமலை ஓடியதாக வைத்திலிங்கம் எம்பி தெரிவித்தார்.

அன்றைக்கு பேசாத தமிழிசை அங்கு ஏன் சென்று அரசியல் செய்யாமல் இங்கு வந்து ஒளிந்து கொண்டதாக குற்றம்சாட்டினார். இவர்கள் தேர்தலில் நிற்கவே பயப்படும் தலைவர்கள்; அதனால் தான் இவ்வாறு ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு பேசுவதாகவும் விமர்சித்தார். மேலும், புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சியில் யார் ஆட்சி செய்கிறார்கள்? ஆளுநர் ஆட்சி செய்கிறாரா? மக்களாட்சியா? எதுவுமே இல்லை” என வைத்திலிங்கம் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: பாஜகவுக்கு அடுத்தடுத்து செக்... உத்தரகாண்ட் அரசியல் நிலவரத்தை ஆராயும் ராகுல்... காங். திட்டம் பலிக்குமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.