ETV Bharat / bharat

தலாய் லாமாவை உளவு பார்த்ததாக புகார் - பீகாரில் சீனப் பெண் கைது!

author img

By

Published : Dec 29, 2022, 8:29 PM IST

chinese
chinese

பீகார் மாநிலம் புத்த கயாவில் தலாய் லாமாவை உளவு பார்த்ததாகச் சந்தேகிக்கப்படும் சீனப் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கயா: பீகார் மாநிலம், புத்த கயாவில், "புத்த மஹோத்சவம்" எனப்படும் புனித போதனை நிகழ்ச்சி இன்று(டிச.29) தொடங்கியுள்ளது. இதில், திபெத்திய புத்த மதகுருவான தலாய் லாமா கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். வரும் 31ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போதனை நிகழ்ச்சியில், 50 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தலாய் லாமா கடந்த 22ஆம் தேதி கயாவுக்கு வருகை தந்தார். அப்போது சீனப் பெண் ஒருவர், அவரை உளவு பார்ப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பீகார் காவல் துறையினர் அந்தப் பெண் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்தப் பெண்ணின் பெயர் ஷோங் ஜியோலன் என்றும், அவர் கடந்த ஓராண்டாக இந்தியாவில் தங்கி இருந்தார் என்றும் தெரியவந்தது. ஆனால், அவர் தங்கியிருப்பது குறித்து தூதரகத்தில் எந்தவித தரவுகளும் இல்லை.

தலாய் லாமாவின் இந்தியா வருகை மற்றும் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை அந்தப் பெண் சேகரித்து வந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து கயாவில் பாதுகாப்பை பலப்படுத்திய போலீசார், அந்த பெண்ணைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அந்தப் பெண்ணின் வரைபடத்தையும் வெளியிட்டு போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், தலாய் லாமாவை உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் அந்த சீனப் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Bodh Mahotsav: கரோனா பரவலுக்கு மத்தியில் பீகாருக்கு படையெடுக்கும் 50 நாடுகளை சேர்ந்த 60,000 பயணிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.