ETV Bharat / bharat

Criminal laws overhaul: இந்திய குற்றவியல் சட்டங்களில் மாற்றம்: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு 20 ஆண்டு சிறை, கூட்டுக்கொலை குற்றத்திற்கு மரண தண்டனை, தேசத்துரோக சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டம்.!

author img

By

Published : Aug 12, 2023, 1:41 PM IST

Etv Bharat
Etv Bharat

Criminal laws overhaul: குற்ற வழக்குகளில் அதிகப்பட்ச தண்டனையை உள்ளடக்கி விரைவில் நியாயம் கிடைக்கப் பெறும் வகையில் காலனித்துவ ஆட்சியில் உருவாக்கப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களில் மாற்றம் செய்து அதற்கான மசோதா இன்று(12.08.2023) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்.

டெல்லி: குற்ற வழக்குகளில் அதிகபட்ச தண்டனையை உறுதி செய்யும் வகையில் காலனித்துவ ஆட்சியால் உருவாக்கப்பட்ட சட்டங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி அதற்கான மூன்று மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவின் மதிப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அனுமதி கிடைத்த பிறகு இந்த மசோதா அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மாற்றி அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றவியல் தண்டனை சட்டத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்திலும் ஆண், பெண் உள்ளிட்ட அனைவருக்கும் நடுநிலையான தண்டனை வழங்கும் வகையில் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாத செயல்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கான தண்டனை தடுப்பு சட்ட மசோதாவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியத் தண்டனை சட்டம் பெயர் மாற்றம்; இந்தியத் தண்டனைச் சட்டம் ஐபிசி 1860 பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) மசோதா 2023 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிஏ) 1898 பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) மசோதா 2023 என மாற்றப்பட்டுள்ளது மேலும், இந்திய ஆதாரச் சட்டம் 1872 பாரதிய சாக்ஷிய (பிஎஸ்) மசோதா 2023 என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம்; பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு பத்து ஆண்டு சிறைத் தண்டனையும் தேவைப்படும் பட்சத்தில் அது ஆயுள் தண்டனையாக நீட்டிக்கப்படும் என இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 20 ஆண்டு முதல் ஆயுள் வரை சிறைத் தண்டனை வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

குறிப்பாக 18 வயதிற்கு உட்பட்ட பெண் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டால் அவர்களுக்கு அபராதத்துடன் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அது ஆயுள் வரை நீட்டிக்கப்படும் வகையிலும் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகப் பொய்யான வாக்குறுதி கொடுத்து அவரை உடலுறவுக்கு உட்படுத்தி திருமணம் செய்யாமல் ஏமாற்றுதல், மத ரீதியான ஏமாற்றல் உள்ளிட்ட பல குற்றங்களுக்கு அபராதத்துடன் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க மசோதா வழிவகை செய்கிறது.

தேசத் துரோகம் தொடர்பான சட்டத்தில் மாற்றம்; தேசத் துரோகச் சட்டம் பிரிவு 150-ல் மாற்றங்கள் செய்யப்பட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுதல், ஆயுதக் கிளர்ச்சி மேற்கொள்ளுதல், நாட்டின் இறையாண்மைக்கோ, ஒற்றுமைக்கோ அல்லது ஒருமைப்பாட்டிற்கோ களங்கம் ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குற்றச் செயல்களாக எடுத்துக்கொள்ளப்பட்டு இந்த மசோதாவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் நபருக்கு அபராதத்துடன் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் எனவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நேரத்தின்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் குற்றத்திற்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

கூட்டுக்கொலை வழக்கு; கூட்டுக் கொலைக் குற்றம், கும்பலாகத் தாக்குதல் நடத்துவது தொடர்பான வழக்குகளில் சிக்கும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் மசோதா கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குற்றத்தில் தண்டனை பெறும் நபர்களின் தண்டனையைக் குறைந்த பட்சம் ஆயுள் தண்டனையாக மட்டும் குறைக்கும் வகையில் வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூன்று மசோதாக்களில் குறிப்பிடத்தக்கச் சிறப்பு அம்சங்கள்; மாற்றி அமைக்கப்பட்டுள்ள குற்ற வழக்குகளில் 180 நாள்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும், விசாரணை நிறைவடைந்து குறைந்த பட்சம் 30 நாள்களில் குற்றவாளிகளுக்குத் தண்டனை தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் மசோதா தெரிவிக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகளில் நீதி கிடைக்கும் வகையில் இந்த சட்டம் வழிவகை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசத் துரோக சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கும்பல் தாக்குதல், கூட்டுக் கொலைக் குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை முதல், மரண தண்டனை வரை வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. குறிப்பாகச் சிறுமிகளுக்கு எதிரான கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு மரண தண்டனை வழங்க இந்த மசோதா பரிந்துரைக்கிறது.

மேலும், குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நபர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகவோ அல்லது ஆயுள் தண்டனையை 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகவோ மட்டுமே குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 11 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.