ETV Bharat / bharat

சில்லறையில் சிகரெட் விற்பனை குற்றமா? - சட்டவிதிகள் குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்!

author img

By

Published : Jul 30, 2023, 5:39 PM IST

cigarettes
புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல் தொடர்பான எச்சரிக்கை லேபிள் இல்லாமல் சில்லறையில் சிகரெட்டை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்றும், இதனை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தடுக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் எஸ்பி சிங் பாகேல் தெரிவித்துள்ளார்.

டெல்லி: இந்தியாவில் சிகரெட்டுகள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 12.8 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில், ஆண்டுக்கு நான்கு முதல் ஐந்து சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிகரெட் விற்பனையைப் பொறுத்தவரை சில்லறை விற்பனை முக்கியப் பங்கு வகிக்கிறது. கடைகளில் ஒற்றை சிகரெட்டாக விற்கப்படுவதில் தான் கனிசமான மக்கள் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். கடைகளுக்குச் சென்று ஒற்றை சிகரெட்டை வாங்குவது மிகவும் எளிதாக உள்ளது. புகைப்பிடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க இதுபோன்ற சில்லறை விற்பனையும் ஒரு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

தரவுகள்படி, இந்தியாவில் தினசரி புகைப்பிடிப்பவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் 25 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள். அதாவது, 46 புள்ளி 8 சதவீதம் பேர் 25 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள். 32 சதவீதம் பேர் 35 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. புகைப்பிடிப்பவர்களில் இளைஞர்கள் மிக அதிகம்.

15 சதவீதம் பேர், 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்றும் புகைப்பிடிப்பவர்களில் 5.5 சதவீதம் பேர் மட்டுமே 45 முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதில், 55 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இந்த சிகரெட், பீடி போன்ற புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இவற்றைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் எம்பிக்கள் வருண்காந்தி, இம்தியாஸ் ஜலீல் ஆகியோர் சில்லறை சிகரெட் விற்பனை தொடர்பான சட்ட விதிகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் எஸ்பி சிங் பாகேல் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "சிகரெட், பீடி மற்றும் புகையிலைப்பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை தடை சட்டம் 2003, பிரிவு 7-ன் படி, விற்பனை செய்யப்படும் அனைத்து சிகரெட் பாக்கெட்டுகளிலும் 'புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்' என்ற எச்சரிக்கை இடம்பெற்றிருக்க வேண்டும்.

அவ்வாறு எச்சரிக்கை இல்லாமல் சிகரெட்டை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். சில்லறை விற்பனையில் புகைப்பிடிப்பவர்களுக்கு இந்த எச்சரிக்கை சென்று சேர்வதில்லை. அதனால், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதுபோன்ற சில்லறை விற்பனையை தடுக்க வேண்டும், COTPA 2003 சட்டத்தை திறம்பட செயல்படுத்த வேண்டும். பல மாநிலங்கள் சில்லறை சிகரெட் விற்பனைக்கு தடை விதித்துள்ளன" என்று கூறினார்.

இதையும் படிங்க: நுரையீரலில் சிக்கிய ஊசியை அகற்றி ஹரியானா மருத்துவர்கள் சாதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.