ETV Bharat / bharat

இலவசமாக இருந்தாலும் வாய்ஸ் கால் தரமானதாக இருக்க வேண்டும் - டிராய்

author img

By

Published : Mar 2, 2020, 12:28 PM IST

TRAI Chief R S Sharma
TRAI Chief R S Sharma

புனே: வாய்ஸ் கால் சேவை இலவசமாக வழங்கப்பட்டுவந்தாலும் அது தரமானதாக இருக்க வேண்டும் என்று டிராய் (இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) தலைவர் ஆர்.எஸ். சர்மா தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு சந்தையில் நுழைந்தது. ஜியோவின் வருகை தொலைத்தொடர்பு சந்தையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. ஜியோவின் அதிரடி சலுகைகளால் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சந்தையில் தங்கள் இருப்பை நிலைநாட்டவே பெரும் பாடுபடுபட்டன.

இதனாலேயே, பல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இலவச வாய்ஸ் கால் சேவையை அறிவித்தன. இருப்பினும், வாய்ஸ் காலின் தரம் மிகவும் மோசமாகிவிட்டது. கால் பேசிக்கொண்டிருக்கும்போதே கட் ஆகும் நிகழ்வுகளும் தற்போது அதிகரித்துள்ளன.

இதனைக் கருத்தில்கொண்டு பேசிக்கொண்டிருக்கும்போதே இணைப்புத் துண்டிக்கப்பட்டால், டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது. இருப்பினும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த அறிவிப்பை நீதிமன்றம் ரத்துசெய்தது.

இந்நிலையில், ஆசிய பொருளாதாரம் தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் சர்மா, "வாய்ஸ் கால் சேவையை இலவசமாக வழங்குவதால் அதிலிருந்து எங்களுக்கு லாபம் கிடைப்பதில்லை என்றும் வாய்ஸ் கால் தரம் குறித்து விமர்சிக்கக்கூடாது என்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை நீதிமன்றம் ரத்துசெய்துவிட்டது. இருப்பினும், வாய்ஸ் கால் தரத்தை உயர்த்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

சாலைகள், ரயில்கள் போல மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாய்ஸ் காலின் தரம் குறித்து இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் சோதனை செய்யப்படுகிறது. இந்தச் சோதனைகளில் வாய்ஸ் கால் தரம் மோசமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

5ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை சேவையைத் தொடங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆர்வம்காட்டுகின்றன. 5ஜி சேவைக்குத் தேவையான உள்கட்டமைப்புகளைச் செய்ய வேண்டியது அவசியம். இந்தியாவில் கம்பியில்லா (வயர்லெஸ்) டேட்டா பரிமாற்றத்திற்கு அதிக தேவையுள்ளது, இருப்பினும் கம்பி மூலம் மேற்கொள்ளப்படும் டேட்டா பரிமாற்றத்திற்கும் தேவையும் உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: அரசியல்வாதிகள் வந்தால் மட்டுமே இணைப்புக் கிடைக்கும் இலவச வைஃபை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.