ETV Bharat / bharat

'தம்மாத்துண்டு ஆங்கர் தான்டா... '; கூகுளுக்கு ஃபைன் அடிக்கக் காரணமான வழக்கறிஞர்

author img

By

Published : Nov 2, 2022, 3:48 PM IST

mistake
mistake

ஆண்ட்ராய்டின் விருப்பத்தேர்வை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியதாக, கூகுள் நிறுவனத்திற்கு இந்தியப்போட்டி ஒழுங்குமுறை ஆணையம் சுமார் 1,337 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. கூகுள் நிறுவனத்தின் தவறை சுட்டிக்காட்டியவர் சுகர்மா என்ற இளம்பெண்.

ஹைதராபாத்: நாம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போன்களில் டீஃபால்ட்டாக சில ஆப்கள் உள்ளன. அவற்றை நம்மால் நீக்க முடியாது. நமக்குப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அந்த ஆப்கள் நமது போனில் இருக்கும். சர்ச் இன்ஜின் மார்க்கெட்டில் கூகுள் நிறுவனத்தின் ஆதிக்கம் காரணமாகவே, இதுபோன்ற டீஃபால்ட் ஆப்களை அந்நிறுவனம் பயனர்கள் மீது திணித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கூகுளின் இதுபோன்ற நடவடிக்கைகளால் பல தொழில்நுட்ப நிறுவனங்களில் வளர்ச்சிப் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கூகுள் நிறுவனம் மீது புகார்களும் உள்ளன. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆண்ட்ராய்டு மொபைல் சாதனத்தின் விருப்பத்தேர்வை தனக்குச் சாதகமாக பயன்படுத்தியதாக, கூகுள் நிறுவனத்திற்கு இந்தியப்போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (competition commission of india) சுமார் 1,337 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

இந்த நடவடிக்கைக்கு முக்கியக்காரணமாக இருந்தவர், டெல்லியைச்சேர்ந்த இளம்பெண் சுகர்மா. இவர் நல்சார் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். இந்தியப்போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தில் சுயாதீன ஆலோசகராக பணியாற்றிய சுகர்மா, கூகுள் பின்பற்றும் சில முறைகளால் பல நிறுவனங்களின் வளர்ச்சிப் பாதிக்கப்படுவதை நிரூபிக்க முயற்சித்தார். தனது நீண்ட ஆராய்ச்சியின் பலனாக இதற்கான ஆதாரங்களைத் திரட்டி, போட்டி ஒழுங்குமுறை ஆணையத்திடம் வழங்கினார். அதன் பேரிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகர்மா கூறுகையில், "நான் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. 2018ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஆணையம் கூகுளுக்கு அபராதம் விதித்தது. அதனடிப்படையில் நான் ஆதாரங்களைத்தேடினேன். நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு, மீதமுள்ள நேரத்தில் தேடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் கூகுள் ஒப்பந்தங்கள் குறித்து ஹார்வர்டு பேராசிரியர் ஒருவர் மேற்கொண்ட ஆய்வைப்பற்றி அறிந்தேன். அதன் மூலம் சில தடயங்கள் கிடைத்தன. அதை சிசிஐயிடம் ஒப்படைத்ததையடுத்து, கூகுளுக்கு அபராதம் விதிக்க முடிந்தது" என்று கூறினார்.

மேலும், "இவ்வளவு பெரிய நிறுவனத்துடன் நான் மோதக் கூடாது என்று பலர் சொன்னார்கள். இத்தனை பெரிய வழக்குக்காக எனக்கு எந்த ஆதாயமும் கிடைக்கவில்லை என்று கூறினார்கள். ஆனால், எல்லாமே பணத்திற்காக செய்யப்படுவதில்லை. நமது கல்வியும் ஒரு சமூக நோக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

இந்த சம்பவத்தால் பயனர்களுக்கு நன்மை நடந்தால் போதும். இந்த ஆய்வுக்குப் புத்தகங்கள் எனக்கு நிறைய உதவியுள்ளன. போட்டிச் சட்டம், அறிவுசார் சொத்துரிமைச்சட்டம், சுற்றுச்சூழல் சட்டம் ஆகியவற்றில் எனக்கு ஆர்வம் அதிகம். அதன் காரணமாகவே இது நடந்தது. ஒவ்வொரு சட்டக்கல்லூரி மாணவ - மாணவிகளுக்கும் இதுபோன்ற ஆர்வம் இருந்தால், பல சாதனைகள் நடக்கும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: ட்விட்டரில் ப்ளு டிக் பயன்படுத்த மாதம் 660 ரூபாய் கட்டணம்; எலான் மஸ்க் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.