பாரா விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ.40,000 நிதியுதவி: சென்னை ஐஐடி, எஸ்பிஐ அறக்கட்டளை அசத்தல் திட்டம்!
இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு வீரருக்கும் ஓராண்டுக்கு மாதந்தோறும் ரூ. 40,000 உதவித்தொகை வழங்கப்படுவதுடன், திறன் மதிப்பீடு, ஊட்டச்சத்து வழிகாட்டல், பிரத்யேக திறன் மேம்பாட்டு ஆதரவு ஆகியவையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Published : August 3, 2026 at 6:09 PM IST
சென்னை: மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் திறமைகளை சர்வதேச அளவிற்கு மேம்படுத்தும் நோக்கில், சென்னை ஐஐடி மற்றும் எஸ்பிஐ அறக்கட்டளை இணைந்து பாரா விளையாட்டு வீரர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கியுள்ளன.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), எஸ்பிஐ அறக்கட்டளை ஆகியவை இணைந்து, இரண்டாம் கட்டமாக பாரா விளையாட்டு வீரர்களுக்கான உதவித்தொகை திட்டத்தைத் தொடங்கியுள்ளன. இதில் 8 பாரா ஒலிம்பிக் பிரிவுகளைச் சேர்ந்த 80 வீரர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் 80 வீரர்களுக்கு ஓராண்டு காலத்திற்கு மாதந்தோறும் தலா ரூ. 40,000 நிதியுதவி வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தில் பாலின சமத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் 40 ஆண் மற்றும் 40 பெண் விளையாட்டு வீரர்கள் என மொத்தம் 80 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், ஜூடோ, பவர்லிஃப்டிங், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேக்வாண்டோ ஆகிய 8 பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இது வெறும் நிதியுதவித் திட்டமாக மட்டுமல்லாமல், வீரர்களின் திறனை மேம்படுத்தும் அறிவியல் தளமாகவும் செயல்படவுள்ளது. இதற்காக, 'அக்ரோஃபேஸ்' (Acrophase) நிறுவனம் மூலம் வீரர்களின் உடற்தகுதி மற்றும் விளையாட்டுத் திறன் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டு, அவர்கள் மேம்பட வேண்டிய பகுதிகள் கண்டறியப்படும். மேலும், ஓராண்டு முழுவதும் வீரர்களின் பயிற்சி மற்றும் போட்டித் தேவைகளுக்கு ஏற்ப, பிரத்யேக விளையாட்டு ஊட்டச்சத்து (Sports Nutrition) வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
தேசிய அல்லது சர்வதேச அளவிலான அதிகாரப்பூர்வ விளையாட்டுப் போட்டிகளில் தங்கள் மாநிலத்தின் சார்பாகவோ அல்லது இந்திய நாட்டின் சார்பாகவோ விளையாடிய 35 வயதிற்குட்பட்ட இந்திய பாரா விளையாட்டு வீரர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியான வீரர்கள், https://sbif-ace-pass.sbifoundation.info/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 9 என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2025ஆம் ஆண்டு 26 பாரா-விளையாட்டு வீரர்களுடன் தொடங்கப்பட்ட முதற்கட்டத் திட்டத்தின் சிறப்பான வெற்றியைத் தொடர்ந்து இந்த விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதலாம் கட்டத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் 32 தங்கம், 22 வெள்ளி மற்றும் 16 வெண்கலம் என மொத்தம் 70 பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே, பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்களின் பதக்க வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் இந்த இரண்டாம் கட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்துப் பேசிய அக்ரோஃபேஸ் தலைவர் மோகனசங்கர் சிவபிரகாசம் கூறுகையில், "எந்தச் சூழலிலும் சிறப்பாக விளையாடும் வாய்ப்பு ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே ஐஐடி மெட்ராஸில் உள்ள எங்களின் எதிர்பார்ப்பு. இரண்டாம் கட்டத்தில் இத்திட்டம் 8 விளையாட்டுகளைச் சேர்ந்த 80 பாரா விளையாட்டு வீரர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அக்ரோஃபேஸ் மூலம், தகுதியான விளையாட்டு வீரர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு அறிவியலை நேரடியாகக் கொண்டு சேர்ப்பதுடன், ஒவ்வொரு வீரருக்கும் பயன்படும் அறிவியல் சூழலை உருவாக்கி வருகிறோம். இது வெறும் உதவித்தொகை மட்டுமல்ல, இந்தியாவின் பாரா விளையாட்டு எதிர்காலத்துக்கான நீண்டகால முதலீடு" என்றார்.
தொடர்ந்து, எஸ்பிஐ அறக்கட்டளையின் மேலாண் இயக்குநர் ஸ்வபன் தார் கூறுகையில், "இந்தியாவின் விளையாட்டுத்துறை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக, ஸ்டேட் வங்கி அறக்கட்டளை ஐஐடி மெட்ராஸுடன் இணைந்து 'பாரா விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு உதவித்தொகை திட்டத்தின்' 2-ஆம் கட்டத்தைத் தொடங்குகிறது. தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பல பாரா விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றதன் மூலம் இத்திட்டத்தின் முதற்கட்டம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
இதையும் படிங்க: |
தற்போதைய காமன்வெல்த் போட்டிகளில், எங்களது உதவித்தொகை பெற்ற மாணவர் ஜந்து குமார் பாரா விளையாட்டுப் பிரிவில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்றுள்ளார். ஆசியப் போட்டிகள், லாஸ் ஏஞ்சலஸ் பாராலிம்பிக் போட்டிகள் உட்பட வரவிருக்கும் உலகளாவிய போட்டிகளுக்குத் தயாராகும் பாரா விளையாட்டு வீரர்களுக்கு, இரண்டாம் கட்டத்தின் மூலம் ஸ்டேட் வங்கி அறக்கட்டளை தொடர்ந்து ஆதரவளிக்கும்" என்று தெரிவித்தார்.

