ETV Bharat / state

வயல்களில் காட்டுப்பன்றிகள் அட்டூழியம்.. மயிலாடுதுறை விவசாயிகள் வேதனை! - pigs damaged in filed

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 9:20 PM IST

காட்டுப்பன்றியால் சேதமடைந்த வயலின் புகைப்படம்
காட்டுப்பன்றியால் சேதமடைந்த வயலின் புகைப்படம்(credit to etv bharat tamil nadu)

Pigs Damaged In Filed In Mayiladuthurai: மயிலாடுதுறை அருகே வயல்களில் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக காட்டுப்பன்றிகள் புகுந்து அட்டூழியம் செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயி பேட்டி (credit to etv bharat tamil nadu)

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில், விவசாயிகள் பம்புசெட் நீரைக் கொண்டு நடப்பாண்டுக்கான முன்பட்ட குறுவை சாகுபடிப் பணிகளை தொடங்கியுள்ளனர்‌‌. இந்நிலையில், மயிலாடுதுறை தாலுகா கொற்கை, தாழஞ்சேரி, ஐவநல்லூர், வரகடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2,000 ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்கின்றனர்.

தற்போது இப்பகுதிகளில் முன்பட்ட குறுவை சாகுபடிக்காக பாய்நாற்றங்கால் விதைவிடும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பாய்நாற்றங்காலில் விதைவிட்டு ஒருசில நாட்களில் பாய்நாற்று விடப்பட்ட வயல்களில், இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக காட்டுப்பன்றிகள் புகுந்து நெல் முளைப்பதற்கு முன்பே அதனை சேதப்படுத்தி வருவதாகவும், இதனால் நெற்பயிர்கள் முளைக்காமல் வீணாகிப் போவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், மின்தடை, விவசாயப் பணிக்கான ஆட்கள் பற்றாக்குறை, இயற்கை இடர்பாடுகள் என்று பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் விவசாயத்தைச் செய்தாலும், தற்போது காட்டுப் பன்றிகளின் அட்டூழியம் அதிகமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தாழஞ்சேரி விவசாயி கண்ணப்பன் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் 500 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வருகிறோம். தற்போது காட்டுப்பன்றி அட்டூழியம் தாங்க முடியவில்லை. ரூ.1,200க்கு விதை நெல் மூட்டையை வாங்கி வயலில் பாய்நாற்றங்காலுக்கு தயார்படுத்தி, பின் விதைவிடுதல் என ஒரு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்து பணியை தொடங்கினால், காட்டுப்பன்றிகள் உள்ளே புகுந்து சேதப்படுத்துகின்றன.

மேலும், பூம்புகார், தரங்கம்பாடி உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளுக்குச் சென்று அங்கு மீன்பிடிக்கப் பயன்படும் வலைகளை வாங்கி வந்து நாற்றங்களைச் சுற்றி அடைத்து வைக்கின்றோம். இரவு நேரங்களில் வயல்களில் லைட்டுகளைக் கட்டி, தூக்கத்தை இழந்து பயிர்களைப் பாதுகாத்தால் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் உடனடியாக இந்த காட்டுப்பன்றிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வேளாண் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு காட்டுப்பன்றியால் பாதிக்கப்பட்ட நாற்றாங்கால்களை ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கைவிரல்கள் ஒட்டிப் பிறந்த குழந்தை.. அறுவை சிகிச்சை மூலம் இயல்பாக்கிய தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்! - THOOTHUKUDI Child Finger Surgery

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.