ETV Bharat / state

“முதலில் கமல்ஹாசன் களத்திற்கு வரட்டும்" - வானதி சீனிவாசன்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 9:46 AM IST

Vanathi Srinivasan
வானதி சீனிவாசன்

Vanathi Srinivasan: கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற மகளிர் பிரதிநிதி மாநாட்டில், கோவை நாடாளுமன்றth தொகுதியில் கமல்ஹாசன் முதலில் களத்திற்கு வரட்டும், பின்னர் வெற்றி பெறுவாரா என்பதை பார்க்கலாம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

வானதி சீனிவாசன் பேட்டி

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், பாஜக சார்பில் பாராளுமன்றத் தொகுதி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக மகளிர் அணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பெண்களுக்கென கொண்டு வந்த திட்டங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. பெண்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, பொருளாதார சுதந்திரம் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது குறித்து பெண்களிடம் உரையாடுகிறோம். இதன் மூலமாக பெண்கள் மத்தியில் ஒரு அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

பெண்களுடைய வாக்கு என்பது, பாஜகவிற்கு நெருங்கி வருவதை நாடு முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் இங்கிருக்ககூடிய மாநிலங்களில் எல்லாம், பாஜகவிற்கு ஆண்களை விட பெண்கள் அதிகமாக வாக்களிக்கின்றனர். இவையெல்லம் ஒரு நல்ல மாற்றமாகத்தான் பார்க்கிறோம். அரசியல் என்பது ஆண்களுக்கானது என்ற சூழல் மாறி, பெண்களும் அரசியலில் தங்களது லட்சியத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கையை பாஜக வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டின் வரியை 2 விதமாக பிரிக்க முடியும். மத்திய, மாநில அரசுகளுக்கான ஒரு பொதுவான வரி என வரும்போது, மாநில அரசுகளுக்கு குறிப்பிட்ட சதவீதம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. முத்திரா திட்டத்தில், நாடு முழுவதும் இருக்கக்கூடிய மொத்த கடன் தொகைகளில், அதிகமான தொகை தமிழ்நாட்டிற்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு, நாம் செலுத்துகின்ற வரியை விட அதிகமாக திட்டங்களை வழங்கி வருகிறது.

திமுகவைப் போல மத்திய அரசு ஊழல் செய்யவில்லை. நேர்மையான ஆட்சிதான் நடக்கிறது. மத்திய அரசு நிதி என்பது, யாருக்கு போக வேண்டுமோ, டெல்லியில் இருந்து நேரடியாக பயனாளிகளுக்குச் சென்றடைகிறது. திமுகவில் உள்ள அமைச்சர் கூட, முதலமைச்சருடைய குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டுள்ளனர்.

கொங்கு மண்டலத்தில் செலுத்துகின்ற வரியை, எவ்வளவு திமுக அரசு கொங்கு மண்டலத்திற்கு கொடுக்கின்றனர்? அதிகப்படியாக வரி செலுத்துவது சென்னைக்கு அடுத்தபடியாக கொங்கு மண்டலத்தில் திருப்பூர், ஈரோடு, கோவை. இந்த வரிப் பணத்தை எடுத்து மற்ற மாவட்டங்களுக்குச் செலவு செய்வதை போல, முதலில் எங்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

லஞ்ச ஊழலை மறைப்பதற்காக திமுகவினர் மத்திய அரசுக்கு எதிராக நாடகமாடி வருகின்றனர். வெளி நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கச் சென்ற முதலமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள முதலாளிகளை அழைத்துச் சென்று வெளிநாடுகளில் வைத்து ஒப்பந்தம் செய்வதில் எந்த பயனும் இல்லை.

மகாத்மா காந்தி வேலைத் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாத காலமாக பணம் வராதது குறித்த கேள்விக்கு, மாநில அரசு முறையாக தொழிலாளர்களின் ஆவணங்களை வழங்காததே காரணம். இல்லையெனில் தொழிலாளர்களுக்கு ஏன் பணம் செலுத்தப்படவில்லை என மாநில அரசு பதிலளிக்க வேண்டும்.

மீண்டும் 3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடிதான் ஆட்சி அமைப்பார். கோவை நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் களத்திற்கு வரட்டும், பிறகு அவர் வெற்றி பெறுவாரா என்பது குறித்துப் பார்க்கலாம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கம்: உயர் நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.