ETV Bharat / state

ஆன்லைன் சூதாட்டம் - புகார் அளிக்க இணையதள முகவரி அறிமுகம்! - ONLINE GAMBLING complaint mail id

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 6:40 PM IST

GAMBLING BAN IN TN
GAMBLING BAN IN TN(etv tn desk archival)

GAMBLING BAN IN TN: தடைசெய்யப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்பும் நபர்கள் அல்லது பிரபலங்கள், விளம்பர நிறுவனங்கள் அல்லது விளம்பரத் தயாரிப்பாளர்கள் அல்லது சமூக ஊடகத் தளங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி வாய்ப்பு விளையாட்டு, பந்தயம் போன்றவற்றை விளம்பரப் பதாகைகள், சுவரொட்டிகள், பேனர்கள், ஆட்டோ ரிக்க்ஷா விளம்பரங்கள் போன்ற வெளிப்புற ஊடகங்கள் மூலமாகவும், அவர்களின் இணையதளம் அல்லது இணையதள செயலி பயன்பாடுகளை விளம்பரப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு இணையவழி சூதாட்டத் தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் 2022-இன்படி, இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி வாய்ப்பு விளையாட்டு, பந்தயம் போன்றவற்றை விளையாடுவதைத் தடை செய்துள்ளது.

அவ்வாறு தடை செய்யப்பட்ட இணையவழி சூதாட்டங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றம்புரிபவர்களுக்கு 3 மாதம் வரை சிறைத்தண்டனையோ அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படும். இணையவழி சூதாட்டம் (Online Gambling) அல்லது இணையவழி வாய்ப்பு விளையாட்டுகள் (Game of Chance) பரிவத்தனைகளில் ஈடுபடும் நிதி நிறுவனங்களை/கட்டண நுழைவாயில்களை இச்சட்டம் தடைசெய்கிறது.

இணையவழி சூதாட்டங்கள் அல்லது வாய்ப்பு அடிப்படையிலான இணையவழி விளையாட்டுகள் குறித்த விளம்பரங்கள் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் அல்லது பிற வழிகளில் இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது தூண்டும் வகையில் எந்த ஒரு நபரும் மின்னணு தொடர்பு சாதனங்கள் உட்பட எந்தவொரு ஊடகத்திலும் விளம்பரமோ அறிவிப்போ செய்ய கூடாது என்று இச்சட்டம் குறிப்பாகக் கூறுகிறது.

அத்தகைய விளம்பரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு அல்லது நிறுவனத்திற்கு, 1 ஆண்டு வரை சிறைத் தண்டனையோ அல்லது 5 லட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும் என்றும் இச்சட்டம் குறிப்பிடுகிறது. அதே குற்றத்தை மீண்டும் செய்தால், சட்டம் 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கிறது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 மற்றும் பிற சட்டங்களின்படி, தடைசெய்யப்பட்ட செயல்பாடுகள் அல்லது சேவைகள் மீதான விளம்பரங்களுக்குத் தடை இருப்பதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) அறிவுறுத்தியுள்ளது. அத்தகையான தடைசெய்யப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்பும் நபர்கள் அல்லது பிரபலங்கள், விளம்பர நிறுவனங்கள் அல்லது விளம்பர தயாரிப்பாளர்கள் அல்லது சமூக ஊடகத் தளங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் ஆணையம் அறிவித்துள்ளது.

எனவே, இம்மாநிலத்தில் இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி வாய்ப்பு விளையாட்டு, பந்தயம் போன்றவற்றை விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள், பேனர்கள், ஆட்டோரிக்க்ஷா விளம்பரங்கள் போன்ற வெளிப்புற ஊடகங்கள் மூலமாகவும், அவர்களின் இணையதளம் அல்லது இணையதளசெயலி பயன்பாடுகளை விளம்பரப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

இணையவழி சூதாட்டம் அல்லது பந்தய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைப் பகிர விரும்புவோர் அல்லது இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்க விரும்புவோர் அல்லது இது சம்பந்தமாக வேறு ஏதேனும் குறைகள் இருப்பின் “www.tnonlinegamingauthority.com" என்ற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளவும். மேலும் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் tnoga@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “புராதனச் சின்னங்களை பாதுகாப்பது தொல்லியல் துறைகளின் கடமை” - உயர் நீதிமன்றம்! - Gangaikonda Cholapuram Temple Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.