ETV Bharat / state

“யாரோ எழுதி கொடுப்பதை ஆளுநர் பேசுகிறார்” - திருமாவளவன் கண்டனம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 6:57 PM IST

Thirumavalavan criticized RN Ravi: ஆளுநர் சர்ச்சைக்குரிய கருத்தை பேசி வருகிறார் எனவும், யாரோ எழுதி கொடுப்பதை பேசுகிறார் என்றும், தமிழ்நாட்டில் பாஜக பதற்றத்தை கட்டவிழ்க்க பார்க்கின்றனர் எனவும் விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம்
ஆளுநர் யாரோ எழுதி கொடுப்பதை பேசுகிறார்

ஆளுநர் பேசியது கண்டிக்கத்தக்கது, யாரோ எழுதி கொடுப்பதை பேசுகிறார்

சென்னை: கால்டுவெல், ஜி.யு.போப் குறித்து ஆளுநர் பேசிய சர்ச்சை கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தென்னிந்திய திருச்சபையின் தமிழ்நாட்டு பேராயர்களால் இன்று (மார்ச் 13) நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், கால்டுவெல் பட்டப்படிப்பு படித்தற்கான சான்றிதழை காண்பித்து, ஆளுநர் தன்னுடைய கருத்தை திரும்ப பெற்றுக் கொண்டு, வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வள்ளுவர் கோட்டத்தில் தென்னிந்திய திருச்சபை சார்பில், கடந்த மார்ச் 4ஆம் தேதி நடைபெற்ற அய்யா வைகுண்டரின் 192 வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசினார். அப்போது, அவர் திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது என்றும், கால்டுவெல் மற்றும் ஜி.யு.போப் பள்ளி படிப்பைத் தொடராதவர்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழகம் முழுவதும் பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. அந்த வகையில், தென்னிந்திய திருச்சபையின் தமிழ்நாட்டு பேராயர்கள், வள்ளுவர் கோட்டத்தில் இன்று (மார்ச் 13) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இங்கு வருகை தந்த நாளில் இருந்து, சர்ச்சைக்குரிய கருத்தை பேசி வருகிறார். திருவள்ளுவர், வள்ளலார், கால்டுவெல் போன்ற பலரைப் பற்றி பேசி வருகிறார்.

அது அவர் பேசவில்லை, அவருக்கு தமிழை பற்றியும் தெரியாது, தமிழ்நாட்டை பற்றியும் தெரியாது. பின்னர் எவ்வாறு அவர் பேச முடியும்? யாரோ எழுதி கொடுத்துதான் பேச வேண்டும். அப்படி எழுதி கொடுப்பவர்கள் சங்கிகளாகத்தான் இருக்க முடியும். பெண் உரிமை என்பதை உச்சரிக்க மாட்டேன் என்று, அவர் தவிர்த்து வரும்போதே தெரிகிறது, அவர் எத்தகைய கடைந்தெடுத்த பிற்போக்குவாதியாக உள்ளார் என்பது.

தமிழ்நாட்டில் பதற்றத்தை கட்டவிழ்க்க பார்க்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள பலருக்கு பாஜகவில் ஆளுநர் பதவியை தருகின்றனர். எல்.முருகனுக்கு அமைச்சர் பதவியை தந்துள்ளனர். யாருக்கு என்ன பதவியை கொடுத்தாலும் பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது, இது பெரியார் பிறந்த சமத்துவ மண்.

தேர்தல் பத்திர விவகாரம் பாஜகவிற்கு பெரிய இடி: இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இங்கு உள்ளவர்கள், முதல்வர் ஸ்டாலின், விசிக உள்ளிட்ட கட்சிகள்தான். தேர்தல் நெருங்க உள்ள நிலையில், தேர்தல் ஆணையர் பதவி விலக காரணம் என்ன? பிரதமர் புதிய அலுவலர்களை நாளை (மார்ச் 13) நியமிக்கிறார்.

தேர்தல் பத்திரங்களின் மூலம் நிதி பெற்ற விவரத்தை வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் எஸ்பிஐ வங்கிக்கு தெரிவித்ததால், அதனை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கி உள்ளது எஸ்பிஐ வங்கி. இது பாஜகவிற்கு பெரிய இடி. பாஜகவில் இதே போன்று கணக்கில் கட்டாத பணம் அதிகம் உள்ளது. வேறு வழியில்லாமல் பத்திரங்களை எஸ்பிஐ நேற்று கொடுத்துவிட்டது. இதனால் பாஜகவின் முகத்திரை கிழியப் போகிறது.

இந்த தேர்தல் வாழ்வா - சாவா யுத்தம்: தற்போது சிஏஏ என்னும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். வெற்றி பெற்று விடலாம் என்று திட்டம் போட்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து விட்டனர். இந்த தேர்தல் வாழ்வா, சாவா என்னும் யுத்தம். பிரதமர் மோடி இது டிரெய்லர்தான் என்று சொல்லி யாரை எச்சரிக்கிறார்? அவர் என்ன பொருளில் சொல்ல வருகிறார். ராமர் கோயில் திறப்பில், 1,000 ஆண்டுகால ஆட்சிக்காக நாட்டுகிறோம் என்று சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி, இதை நாம் எண்ணி பார்க்க வேண்டும்.

முஸ்லீம், கிறித்தவ பெண்கள் வாக்களிக்க வர வேண்டும்: முஸ்லீம் மற்றும் கிறித்துவப் பெண்கள் தேர்தலில் வாக்களிக்க வருவதில்லை. அவர்கள் அதிகளவில் வந்து வாக்களிக்க வேண்டும். சிறுபான்மையினரின் வாக்குகள் முழுவதுமாக அளிக்க வேண்டும்” என பேசினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜி.யு.போப், கால்டுவெல் ஆகியோரை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதற்கு பல முனைகளில் இருந்து அவருடைய கருத்துக்கு கண்டனங்கள் எழுந்தது. ஆளுநர் தன்னுடைய கருத்தை திரும்பப் பெற வேண்டும். இது போன்று சமூக பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஆர்ப்பாட்டமாக தென்னிந்திய திருச்சபை சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருக்கிறது.

தேர்தல் நேரத்தில் சமூக பதற்றத்தை ஏற்படுத்துவது சங்பரிவாரர் அமைப்புகளின் உத்திகளில் ஒன்று. அந்த வகையில், கைதேர்ந்த ஆர்எஸ்எஸ் ஏஜென்ட் ஆக இருக்கிற ஆர்.என்.ரவி, இஸ்லாமியர்களை சீண்டுவதை போல கிறிஸ்தவர்களையும் சீண்டி பார்க்கிறார். இந்த போக்கு வன்மையாக கண்டனத்திற்குரியது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதற்கு ஆளுநர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

இது தெரியாமல் பேசுவது அல்ல, திட்டமிட்டு பேசுவது. யாரோ எழுதிக் கொடுத்து மட்டும் அவர் பேசுகிறார், அறியாமல் பேசுகிறார் என்று இதை கடந்து செல்ல முடியாது. திட்டமிட்டு இது போல பேசுவதன் மூலம், கிறிஸ்தவ சமூகத்தினரை சீண்டி, கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர் அல்லாதவர்களிடையே பதற்றத்தை உருவாக்கி, ஆதாயம் தேடுவதுதான் அவரின் நோக்கம். இது வட இந்திய மாநிலங்களில் அவர்கள் ஏற்கனவே செய்து பார்த்த ஒரு சோதனை, தற்போது தமிழ்நாட்டில் செய்கிறார்கள்.

சிஏஏ சட்டத்தை மிக வன்மையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. இந்தியா முழுவதும் இதற்கு ஜனநாயக சக்திகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த எதிர்ப்பை எதிர்கொள்ள இயலாத நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக அச்சட்டத்தை கிடப்பிலே போட்டு விட்டனர்.

இப்போது அதை நடைமுறைப்படுத்துவதன் நோக்கம், தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும் இடையில் ஒரு இடைவெளியை ஏற்படுத்த வேண்டும், பிளவை ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம் பெரும்பான்மையான அரசியலை முன்னெடுக்க முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்.

ஆகவே சிஏஏ சட்டம் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிற ஒரு சதி முயற்சி தான். எனவே வருகிற மார்ச் 15ஆம் தேதி, சிஏஏ சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தலைநகரங்களில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, எந்த பகுதியாக இருந்தாலும் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டால் பாஜக அங்கு போவதில்லை. மணிப்பூருக்கு இதுவரை போனதே இல்லை.

ஆனால் தேர்தலுக்காக, ஒரே மாநிலத்திற்கு திரும்பத் திரும்ப வருகிற நிலையை நாம் பார்க்கிறோம். அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் நலனை விட தங்களின் அரசியல் ஆதாயம் தான் முக்கியம் என செயல்படுபவர்கள் அவர்கள்” என கூறினார். இதையடுத்து கால்டுவெல் பட்டப்படிப்பு படித்தற்கான சான்றிதழை அனைவர் முன்பும் காண்பித்தனர்.

இதையும் படிங்க: "ஜாஃபர் சாதிக்குடன் திமுக முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு" - பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.