ETV Bharat / state

போலியோ சொட்டு மருந்து முகாம்; 98.18 சதவீதம் பேர் பயனடைந்தனர்.. விடுபட்டவர்களுக்கு பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 9:39 PM IST

Polio Drops
போலியோ சொட்டு மருந்து

Polio Drops: தமிழகத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு வழங்குவதில் நிர்ணயித்த இலக்கை விட சற்று குறைவாக வழங்கப்பட்டுள்ளது எனவும், விடுபட்ட குழந்தைகளுக்கு அடுத்த வாரம் வழங்கப்படும் என பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று (மார்ச் 3) தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.

இம்மையங்களில் 57.38 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், சைதாப்பேட்டையில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டு துவக்கி வைத்தார். இந்த போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் உறுதுணையாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த சொட்டு மருந்து வழங்கும் முகாம் மாலை 5 மணியுடன் நிறைவடைந்த நிலையில், பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் அதிகமானது முதல் குறைவான சொட்டு மருந்து வழங்கப்பட்டது குறித்து கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில், தமிழகத்தில் கோவில்பட்டிக்கு இலக்காக 36,174 நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 41,088 (113.58%) குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தி முதலிடத்தையும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு இலக்காக 1,46,903 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 1,55,009 (105.52%) குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தி 2வது இடத்தையும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இலக்காக 93,394 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 98,113 (105.05%) குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தி 3வது இடத்தையும் பெற்றுள்ளது.

தொடர்ந்து, திருச்சி மாவட்டத்திற்கு இலக்காக 1,90,267 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 1,93,963 (101.94%) குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தி 4வது இடத்தையும், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இலக்காக 1,50,767 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 1,53,486 (101.80%) குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தி 5வது இடத்தையும் பிடித்துள்ளது.

சென்னைக்கு இலக்காக 5,53,343 நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 5,27,092 (95.26%) குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தி 35வது இடத்தையும், தேனி மாவட்டத்திற்கு இலக்காக 91,615 நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 86,246 (94.14%) குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தி 46வது இடத்தையும், பழனிக்கு இலக்காக 73,648 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 69,014 (93.71%) குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தி 47வது இடத்தையும்,

சேலம் மாவட்டத்திற்கு இலக்காக 2,10,628 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 1,97,180 (93.62) குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தி 48வது இடத்தை பிடித்துள்ளது. மொத்த இலக்காக 57,38,476 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 56,34,204 (98.18%) குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், விடுபட்ட குழந்தைகளை வீடு வீடாகச் சென்று அடுத்த வாரம் கண்டறிந்து போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படும் என பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஒரு விமான நிலையமே தற்போது தற்காலிகமாக சர்வதேச விமான நிலையமாக உள்ளது.. ஆனந்த் அம்பானி இல்ல விழா குறித்து கார்த்தி சிதம்பரம் காட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.