ETV Bharat / state

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.20,198 கோடி ஒதுக்கீடு.. முழு விவரம்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 3:23 PM IST

Etv Bharat
Etv Bharat

Tamil Nadu Budget 2024: மக்களைத் தேடி மருத்துவம் மற்றும் இன்னுயிர் காப்போம் ஆகிய திட்டங்களின் மேம்பாடு, அரசு மருத்துவமனைகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 20 ஆயிரத்து 198 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: தமிழக அரசின் இந்த ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். அந்த வகையில், அரசின் மருத்துவ உதவி மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களுக்காக அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் மருத்துவத் துறையின் தொடர் முயற்சிகளால், 2030ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டிய கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் நலம் தொடர்பான நிலைத்த வளர்ச்சி இலக்குகளை, தமிழ்நாடு ஏற்கெனவே எட்டியுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் தொற்றா நோய்களின் பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தொற்றா நோய் உண்டாவதற்கு முக்கியக் காரணிகளாக விளங்கும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

இந்த நோக்கத்தோடு, 'மக்களைத் தேடி மருத்துவம்' எனும் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வீட்டிலிருந்தே பயன்பெறும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்கும் இந்த திட்டத்திற்காக, 243 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

மருத்துவ உதவி & காப்பீட்டுத் திட்ட மேம்பாடு: மருத்துவக் காப்பீட்டைப் பயன்படுத்தி நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில், அரசு மருத்துவமனைகளின் பங்களிப்பை 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தி, நாட்டிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இந்த மருத்துவமனைகளில் கட்டமைப்பை மேலும் மேம்படுத்தி, உயர் சேவைகளை வழங்குவதற்காகக் காப்பீட்டுத் தொகுப்பு நிதியிலிருந்து 200 கோடி ரூபாய் செலவிடப்படும்.

விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காத்து, 2 லட்சம் நபர்களுக்கு மேல் பயன் பெற்றுள்ள நாட்டிலேயே முன்னோடியான 'இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48' திட்டத்தை மேலும் மேம்படுத்த இந்த அரசு முனைந்துள்ளது. அதன் படி சிகிச்சை செலவுகளைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்தின் கீழ் விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து, 2 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

மருத்துவமனைகள் மேம்பாடு: மாநிலம் முழுவதும் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் நோய் கண்டறிதல் சேவைகளுக்கான கட்டமைப்பு வசதிகள் வரும் நிதியாண்டில் மேலும் மேம்படுத்தப்படும். அந்தவகையில், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், அரியலூர் மாவட்டம் செந்துறை, காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் தேனி, சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், 142 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட, 6 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் கட்டப்படும்.

அதேபோல் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 40 கோடி ரூபாய் செலவில், 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டப்படும். மேலும், 87 கோடி ரூபாய் செலவில் 25 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகளுக்குக் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும். மேலும், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் 64 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

புற்றுநோய் பாதிப்புகளைக் குறைக்கத் திட்டம்: புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சைகள் அளிப்பதோடு, இந்நோயை ஆரம்பநிலையிலேயே கண்டறிவது, புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பது மிகவும் அவசியமாகும். அந்த வகையில், மாநிலத்தில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைத் துறைகளை அரசு மேம்படுத்தியுள்ளது.

மேலும், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஆரம்ப நிலையிலேயே அதனைக் கண்டறிவது, தகுந்த சிகிச்சை அளிப்பது மற்றும் புணர்வாழ்வு சேவைகள் அளிப்பது போன்ற பல்வேறு நோய் மேலாண்மை உத்திகளைக் கொண்டு, ஒரு புதிய புற்றுநோய் மேலாண்மை இயக்கத்தை இந்த அரசு செயல்படுத்தும்.

அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனைக்குத் தேவையான உயர்தர சிகிச்சைக்காக, கூடுதல் உயர்நிலை புற்றுநோய்க் கருவிகள் வழங்கப்பட்டு, அதை உயர் திறன் மையமாக (Centre of Excellence) தரம் உயர்த்தப்படும்.

போதைப் பழக்க மீட்பு மையங்கள்: 25 அரசு மருத்துவமனைகளில் சிறப்புப் போதைப் பழக்க மீட்பு மையங்களை நிறுவி, மது மற்றும் போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மனநல ஆலோசனை, மருத்துவச் சிகிச்சை மற்றும் புணர்வாழ்வு சேவைகள் வழங்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 20 ஆயிரத்து 198 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வறுமையை ஒழிக்க 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்'..! பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.