ETV Bharat / state

அரசுப் பண்ணையில் உணவின்றி தவிக்கும் மாடுகள்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை! - cattle farm issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 10:06 PM IST

உணவின்றி சாலையில் மாடுகள் சுற்றித்திரியும் புகைப்படம்
உணவின்றி சாலையில் மாடுகள் சுற்றித்திரியும் புகைப்படம் (Credit: ETV Bharat Tamilnadu)

Cattle Farm: ஓசூர் அடுத்த மத்திகிரியில் உள்ள கால்நடை பண்ணையில் போதிய உணவு இல்லாததால் கால்நடைகள் உணவிற்காக வெளியே சுற்றித்திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் பேட்டி (Credit: ETV Bharat Tamilnadu)

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த மத்திகிரியில் கால்நடை பண்ணை ஒன்று அமைந்துள்ளது. 1,500 ஏக்கர்கள் பரப்பளவில் உள்ள இந்த பண்ணையில் நாட்டு இன மாடுகள், குதிரைகள், நாட்டுக்கோழிகள், பன்றி, ஆடுகள் உள்ளிட்டவை பராமரிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, இங்கு காங்கேயம், சிந்து, புலிக்குளம், பர்கூர் மலை மாடுகள் என பல்வேறு நாட்டு இன மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும், எருது, குதிரைகளிலிருந்து விந்து சேகரித்து, நாடு முழுவதும் உற்பத்திக்காக ஏற்றுமதி செய்யக்கூடிய முக்கிய கால்நடை பராமரிப்பு பண்ணையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், ஓசூர் பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக மாடுகள் உணவு தேடி வெளியே சுற்றித் திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, பண்ணையில் வளர்க்கப்படும் மாடுகள், பண்ணையில் போதிய தண்ணீர் மற்றும் உணவு இல்லாததால் உணவு தேடி பண்ணையை விட்டு வெளியே சென்று மேய்ந்து வருகிறது.

அவ்வாறு மேய்தலுக்காக வெளியே செல்கையில், ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையைக் கடக்கும் போது விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான மாடுகள் சாலையைக் கடப்பதால் போக்குவரத்து நேரிசல் ஏற்படுகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர் செந்தமிழ் கூறுகையில், "அரசால் பராமரிக்கப்படும் இந்த பண்ணையில் அரிய வகை மாடுகள் வளர்க்கப்படுகிறது. இந்த நிலையில், வறட்சியின் காரணமாக உணவு தட்டுப்பாடு உள்ளதால் மாடுகள் மேய்ச்சலுக்காக பண்ணையை விட்டு வெளியே செல்லக்கூடிய சூழல் உள்ளது. அதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

அதேபோல், 200க்கும் மேற்பட்ட கால்நடைகளைப் பராமரிக்க ஒரே ஒரு ஊழியர் மட்டுமே உள்ளார். எனவே, அரசு ஊழியரை அதிகப்படுத்தவும், கால்நடைகளுக்குத் தேவையான உணவுகளை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: மலைத்தொடர்களிலுள்ள மாணவர்களுக்கு உலக அளவிலான கராத்தே பயிற்சி; திருப்பூரைச் சேர்ந்த மாஸ்டர் நாகராஜன் அசத்தல்! - World Level Karate Training

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.