ETV Bharat / state

ஊழல் முறைகேட்டில் சிக்கிய திமுக ஒன்றிய குழு தலைவர் பதவி நீக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 12:35 PM IST

salem dmk panchayat union chairperson dismissed in corruption case
ஊழல் முறைகேட்டில் சிக்கிய திமுக ஒன்றிய குழு தலைவர் பதவி நீக்கம்

DMK Panchayat Union Chairperson Dismissed: சேலத்தில் பல்வேறு ஊழல் முறைகேடுகளில் சிக்கிய திமுக ஒன்றிய குழு பெண் தலைவர், அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம்: சேலத்தில் பல்வேறு ஊழல் முறைகேடுகளில் சிக்கிய கெங்கவல்லி பகுதி திமுக ஒன்றிய குழு பெண் தலைவரை அதிரடியாக பதவி நீக்கம் செய்து, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளது, சேலம் திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள நாகியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா பாலமுருகன். இவர் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் கெங்கவல்லி பகுதி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, கெங்கவல்லி ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, ஒன்றிய குழு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, திமுக ஆட்சி மாற்றத்திற்குப் பின் அதிமுகவில் இருந்து விலகி, அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த துணைத் தலைவர் விஜேந்திரன் தலைமையிலான 5 பேர், அதிமுக கவுன்சிலர்கள் நான்கு பேர் உள்ளிட்டோர், ஒன்றிய குழுத் தலைவர் பிரியா மீது, அரசு திட்டப் பணிகளில் பல்வேறு முறைகேடு செய்வதாகப் புகார் தெரிவித்தனர்.

தொடர்ந்து, தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும்படி, கடந்த ஆண்டு அப்போதைய சேலம் மாவட்ட ஆட்சியரான கார்மேகத்திடம் மனு அளித்திருந்தனர். அதன்பேரில், ஒன்றிய குழு தலைவர் பிரியா பாலமுருகன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து, கெங்கவல்லி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் ஓட்டெடுப்பு நடந்தது.

இதில் திமுகவைச் சேர்ந்த துணைத் தலைவர் விஜேந்திரன், கவுன்சிலர்கள் சுசீலா, முருகேசன், கோமதி, கார்த்திக், அதிமுக கவுன்சிலர்கள் உமாராணி, தனலட்சுமி, சாமிநாதன், கீதா உள்பட 9 கவுன்சிலர்கள், ஒன்றிய குழுத் தலைவர் பிரியாவுக்கு எதிராக வாக்கு அளித்தனர். இக்கூட்டத்தில் திமுக கவுன்சிலர் கலைச்செல்வி பங்கேற்கவில்லை. இதையடுத்து, இந்த தீர்மான விவரங்களை அப்போதைய ஆத்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் ரமேஷ், தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம் 1994 பிரிவு 212-இன் படி, கெங்கவல்லி ஒன்றிய குழுத் தலைவரான பிரியா, ஒன்றிய குழு தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு, அதற்கான உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் அரசிதழ் உத்தரவை தற்போது அனுப்பி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம்: தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.