ETV Bharat / state

கோடைக் காலத்தில் குடிநீர் பிரச்சனையா?.. சேலம் மக்கள் புகார் தெரிவிக்க தொலைப்பேசி எண் அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 7:10 PM IST

சேலம் மக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
சேலம் மக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

Salem water Scarcity issue: சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் விநியோகம் தொடர்பாகப் புகார் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையினை 1077 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணிலோ அல்லது 0427-2450498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் வழங்குதல் தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.02) நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்களின் முக்கிய தேவைகளின் ஒன்றான குடிநீர் விநியோகம் சேலம் மாவட்டத்தில் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்திடும் வகையில் தொடர்புடைய அலுவலர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 4 நகராட்சிகள், 29 பேரூராட்சிகள் மற்றும் 4,475 ஊரகக் குடியிருப்புகளுக்குக் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலம் நாள்தோறும் சராசரியாக 181.292 மில்லியன் லிட்டர் குடிநீர் 38.28 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், நரசிங்கபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டம், காவேரிபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், பி.என்.பட்டி, வீரக்கல்புதூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், வெள்ளாளப்பட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் பொதுமக்களின் குடிநீர்த் தேவையினைப் பூர்த்தி செய்கிறது.

மேலும் இராசிபுரம், எடப்பாடி கூட்டுக் குடிநீர்த் திட்டம், இருப்பாளி கூட்டுக் குடிநீர்த் திட்டம், சங்ககிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம், எடப்பாடி, கொங்கணாபுரம் மற்றும் மகுடஞ்சாவடி கூட்டுக் குடிநீர்த் திட்டம், மேச்சேரி, நங்கவள்ளி கூட்டுக் குடிநீர்த் திட்டம், இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் ஏற்காடு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் வாயிலாக 181.292 மில்லியன் லிட்டர் (92.09%) குடிநீர் பொதுமக்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் இராசிபுரம், எடப்பாடி கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கான சேலம் பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள காவேரிபுரம் மற்றும் 11 ஊராட்சிகளில் உள்ள 140 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் சோதனை ஓட்டத்தில் உள்ளது. இருப்பாளி, 236 குடியிருப்புகள் 1066 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் சங்ககிரி பேரூராட்சி மற்றும் 248 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் வரும் 31.03.2024இல் முடிக்கப்படவுள்ளது. இத்திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதற்குப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனத் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சேலம் அரசு சட்டக் கல்லூரி விடுதி உணவில் பல்லி - 10க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.