ETV Bharat / state

விழுப்புரத்தில் லாக்கப் டெத்? வீட்டுக்கு வந்து இறந்த நபர்.. கோர்ட் உத்தரவால் மறு பிரேத பரிசோதனை! - custodial death complaint

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 1:22 PM IST

police attack death case: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனது கணவர், போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக மனைவி பதிவு செய்த வழக்கில், இறந்தவரின் உடலுக்கு விழுப்புரம் நீதித்துறை நடுவர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் முன்னிலையில் மறு பிரேத பரிசோதனை நடைபெற்றது.

Villupuram police image
விழுப்புரம் போலீசார் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

விழுப்புரம்: ஜிஆர்பி தெருவில் வசித்து வந்தவர் ராஜா. இவருக்கு அஞ்சு என்கிற மனைவியும், இரண்டு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், ராஜா தனது மூத்த மகனுடன் விழுப்புரம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் இயங்கும் கேண்டீனில் தினசரி சம்பளத்திற்காக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் 10ஆம் தேதி வழக்கம் போல இரவு வேலை முடித்துவிட்டு ராஜா தான் வேலை செய்யும் கேண்டீனில் படுத்து உறங்கி உள்ளார்.

அங்கு இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட தாலுகா போலீசார் காலை 7.30 மணி அளவில் டாஸ்மாக் கேண்டினில் படுத்து உறங்கிய ராஜாவை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அவரை விசாரணை என்கிற பெயரில் போலீசார் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், ராஜா இரவு நேரத்தில் 10 மது பாட்டில்களை வைத்து பிளாக்கில் விற்பனை செய்ததாகவழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறி அவரை சொந்த ஜாமினில் விடுதலை செய்துள்ளனர்.

இதனைதொடர்ந்து வீட்டிற்கு வந்த ராஜா, தன்னை போலீசார் பூட்ஸ் கால்களால் தாக்கியதாகவும் தற்போது நெஞ்சு வலி அதிகமாக இருப்பதாகவும் கூறி வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக ராஜாவை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதன் பிறகு மேற்கு காவல் நிலையத்திற்கு ராஜாவின் மனைவி அஞ்சுவை அழைத்துச் சென்ற காவலர்கள், உங்கள் கணவர் வீட்டிலேயே இறந்து விட்டதாக ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்றதாகவும், அதன் பின்னர் அவசர அவசரமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ராஜாவின் பிரேதத்தை எடுத்துச் சென்று ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பிரேத பரிசோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த நடவடிகைகள் போலீசாரின் தூண்டுதலின் பேரில் நடைபெற்றதாக சந்தேகம் அடைந்த ராஜாவின் மனைவி, நீதிமன்றத்தை நாட முடிவு செய்த நிலையில், இதை அறிந்து கொண்ட போலீசார் ராஜாவின் உடலை எரிக்க வேண்டும் என்று மிரட்டியதாகவும், ராஜாவின் மனைவி அஞ்சு உறவினர்கள் ஒப்புதலோடு விழுப்புரம் கேகே ரோடு பகுதியில் அமைந்துள்ள இடுகாட்டில் ராஜாவின் உடலை புதைத்துள்ளார்.

பின்னர் மதுரையில் இயங்கி வரும் மக்கள் கண்காணிப்பகத்தை நாடிய அஞ்சு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார். அந்த வழக்கில் தன் கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், காவல் நிலையத்தில் வைத்து தன் கணவரை தாக்கியதால் தான் அவர் உயிரிழந்தார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராஜாவின் உடலை எட்டு நாட்களுக்குள் திருச்சி, மதுரை, நெல்லையில் உள்ள மருத்துவர்கள் குழுவை கொண்டு மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், இறந்து 40 நாட்கள் ஆன நிலையில் உள்ள ராஜாவின் உடலை முழுவதுமாக ஸ்கேன் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து இன்று காலை 6:30 மணியளவில் ராஜாவின் பிரேதம் விழுப்புரம் நீதித்துறை நடுவர் ராதிகா, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: மறு பிரேத பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு.. விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் நடந்தது என்ன? - MHC Ordered Re Autopsy

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.